கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பலருக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து அசௌகர்யம் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடல் சூடு அதிகரிப்புக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதால், அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த பதிவில் உடல் உஷ்ணத்திற்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.
உடல் உஷ்ணத்திற்கான காரணங்கள்:
கோடைகாலத்தில் உடல் சூடு அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணம் மோசமான வானிலை ஆகும். அதிக வெப்பநிலை மற்றும் சூரிய ஒளி உடலின் வெப்பநிலையை அதிகரிக்கலாம்.
கோடை காலத்தில் போதிய நீர் குடிக்காமல் இருந்தால், நீரிழிப்புக்கு வழிவகுத்து உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.
சூரிய ஒளியில் அதிக நேரம் வேலை செய்வது அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால், உஷ்ணம் அதிகரிக்கும். நாம் வேலை செய்யும்போது உடல் வெப்பத்தை உருவாக்குகிறது, இத்துடன் வெளிப்புற வெப்பமும் சேர்ந்தால், உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
காரமான உணவுகளை உட்கொள்வதாலும் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அவற்றின் தெர்மோஜெனிக் பண்புகள் காரணமாக, தற்காலிகமாக உடல் வெப்பநிலை உயரும்.
உடல் உஷ்ணத்திற்கான தீர்வுகள்:
தினசரி போதிய அளவு நீரேற்றத்துடன் இருங்கள். குறிப்பாக கோடைகாலங்களில் தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
காற்று எளிதாக ஊடுருவக்கூடிய பருத்தி அல்லது கைத்தறி போன்ற இலகுரக துணிகளை அணியுங்கள். இது காற்று சுழற்சியை அனுமதித்து உடலை குளிர்விக்க உதவுகிறது.
முடிந்தவரை வெயிலில் அதிகம் செல்லாமல், நிழலிலேயே இருங்கள். குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் உச்ச நேரங்களில், வெளியே செல்ல வேண்டாம்.
தயிர், புதினா, இளநீர், வெள்ளரி, முலாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சியான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினசரி குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் வெப்பநிலை வெகுவாகக் குறையும்.
இயற்கையாகவே குளிர்ச்சியைத் தரும் சந்தன பேஸ்ட், ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல் போன்றவற்றை உடலில் தடவுங்கள். இது உடல் சூட்டை பெரிதளவில் தடுக்கும்.
வெயில் காலங்களில் காரமான உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
முடிந்தால் வீட்டில் ஒரு ஏசி வாங்கி மாட்டிக் கொள்ளுங்கள். இது உங்களையும் உங்கள் சுற்றுப்புறத்தையும் குளுமையாக வைத்திருக்க உதவும்.
இந்த வழிகளைப் பின்பற்றினால் உங்களது உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்து, கோடைகாலத்தை மிகவும் இன்பமான காலமாக அனுபவிக்க முடியும்.