சில காலம் முன்பு வரை நம்மில் பலரும் ரைஸ், இட்லி, தோசை, இடியாப்பம் என அதிகம் அரிசியால் தயாரிக்கப்படும் உணவுகளையே உண்டு வந்தோம். பின்னர் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கோதுமை, ஓட்ஸ், சிறு தானிய வகைகள் என பலவும் நம் தட்டுகளில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளன. இவற்றில் ஓட் மீல் தரும் ஒன்பது ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பீட்டா குளுகான் என்ற சத்து காயங்களை ஆற்றவும் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் கூடியவை. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்தானது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுத்து, சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது.
இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீமை தரும் ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராடி இதய ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன. ஓட்ஸில் உள்ள லிக்னன்ஸ் (Lignans) என்ற பொருள் ஓவரியன், மார்பக, மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் உண்டாக்கக் காரணமாக இருக்கும் ஹார்மோன்களை எதிர்த்துப் போராடும் குணமுடையது.
தினசரி ஓட்ஸை நம் உணவில் சேர்த்துக்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் உண்டாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தலாம். நார்ச்சத்து இல்லாத மற்ற உணவுகளுடன் ஓட்ஸ் மீல் சேர்த்து சாப்பிடும்போது ஓட்ஸிலுள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியுணர்வைத் தடுக்கிறது. இதனால் உட்கொள்ளும் கலோரி அளவு குறைந்து உடல் எடையை நார்மலாகப் பராமரிக்க முடியும்.
ஓட்ஸில் சிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் உள்ளது. இது பருக்களை எதிர்த்துப் போராடும்; சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சிவிடும். இவ்விதமாக சருமப் பராமரிப்புக்கு ஓட்ஸ் உதவி புரிகிறது. உச்சந்தலைப் பகுதியில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்ச உதவி புரியும் ஓட்ஸ். பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெறவும் ஓட்ஸ் உதவும்.
இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. அதனால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேன்மை பெறுகிறது. இவ்வாறான ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ள ஓட் மீலை நாமும் தினசரி உண்போம்; திடமான உடலமைப்புப் பெறுவோம்.