சிறுநீர்ப் பாதைத் தொற்று (Urinary Tract Infection - சுருக்கமாக UTI) என்பது நம் உடலில் சிறுநீரகம் அமைந்துள்ள இடத்தில், கிட்னி, பிளாடர், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை குழாய் போன்ற எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பாக்டீரியாக்களால் உண்டாகும் தொற்று நோயாகும். பெண்களின் சிறுநீர்ப்பை குழாய் அளவில் சிறியதாக இருப்பதால் இந்நோய் பெண்களையே அதிகம் தாக்குகிறது. ஆண்களுக்கும் இது வரக்கூடியதுதான்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல், சிறுநீரில் துர்நாற்றம் மற்றும் அதன் கலரில் மாற்றம் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். இதற்கு சரியான முறையில் மருத்துவம் பார்க்காவிட்டால் கிட்னியை பாதிக்கும் அளவுக்கு சீரியஸ் ஆகிவிடும்.
சிறுநீர்ப் பாதை தொற்றுக்கான காரணங்கள்:
1. நம் குடலுக்குள் வாழும் ஈகொலி (Escherichia Coli) என்ற பாக்டீரியா சிறுநீர்ப் பாதைக்குள் நுழைந்து இந்தத் தொற்று நோயை உண்டாக்குகிறது.
2. செக்ஸுவல் செயல்பாடுகள் மூலமும் பாக்டீரியாக்கள், குறிப்பாக பெண்களின் சிறுநீர்ப் பாதைக்குள் நுழைந்து UTI வருவதற்கான வாய்ப்பை உண்டாக்குகின்றன.
3. சிறுநீர் அல்லது மலம் கழித்த பின் சுத்தம் செய்வதில் முறையான சுகாதாரத்தைப் பின்பற்றத் தவறுவதாலும் மலக்குடல் வழியாக பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதைக்குள் சென்று தொற்று உண்டாக வழிவகுக்கும்.
4. சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்படும்போது உடனடியாக கழிக்காமல் அதை அடக்கி வைத்தால் பாக்டீரியாக்கள் அதிகளவில் பெருகி தொற்றை உண்டுபண்ணும்.
5. தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டீஹைட்ரேஷன் ஆகி, சிறுநீர் கழிப்பதில் இடைவெளி அதிகரிக்கும். அப்போது பாக்டீரியாக்கள் உடனுக்குடன் வெளியேற்றப்படாமல் சிறுநீர்ப் பாதையிலேயே தங்கி தொற்றுக்களை உண்டுபண்ணும்.
6. நீண்ட காலம் யூரினரி கேதெட்டர்ஸ் (Urinary Catheters) உபயோகிப்பதும் சிறுநீர்ப் பாதையில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகக் காரணமாகி தொற்றுக்களை உண்டுபண்ணும்.
7. மாதவிடாய் சுழற்சியின்போது ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியில் உண்டாகும் ஏற்றத் தாழ்வுகளும் சிறுநீர்ப் பாதையில் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்து தொற்றுக்களை உண்டாக்கும்.
8. நீரிழிவு, கிட்னியில் கல், வீக்கம் உள்ள ப்ரோஸ்டேட் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சிறுநீர் வெளியேற்றம் நார்மலாக இருக்காது. இக்குறைபாட்டினாலும் பாக்டீரியாக்கள் வளரவும் தொற்று உண்டாகவும் வாய்ப்பாகும்.
9. உடல் நலக் குறைவினால் மருத்துவ சிகிச்சை பெற்று வரும்போது நோயெதிர்ப்பு சக்தி குறைவதாலும் UTI வரும் வாய்ப்பு உண்டு.
UTI நோயை வீட்டிலேயே எளிய முறையில் குணப்படுத்த வழியுண்டு. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரல் குணங்கள் உடையது. பூண்டை நசுக்கி அல்லது வெட்டி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது அல்லிசின் வெளியேறி அது, UTI உண்டாகக் காரணமாயிருக்கும் ஈ.கொலி உள்ளிட்ட பல நோய்க் கிருமிகளை வளர விடாமல் தடுக்கும்.
பூண்டு உடலில் வீக்கங்களைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் உதவும். பூண்டின் டையூரிக் குணமானது சுலபமாக சிறுநீர் பிரிய பெரிதும் உதவும். இதனால் வெளியேறும் சிறுநீர் வழியே பாக்டீரியாக்களும் வெளியேற்றப்பட்டு தொற்றுநோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படும்.
நாமும் அடிக்கடி பூண்டினை உணவுடன் சேர்த்து உட்கொண்டு தொற்று நோய்க் கிருமிகளின் தாக்கம் இன்றி ஆரோக்கியமாய் வாழ்வோம்.