நீர்ச் சுருக்கு - பெண்களை அதிகம் தாக்கும் நோய்!

Urinary Tract Infection
Urinary Tract Infection

யூரினரி இன்ஃபெக்ஷன் என்பது சிறுநீர்த் தாரையில் கிருமிகள் பரவி உண்டாகும் நோய் ஆகும். இது ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம் வரும். அதிலும் இளம் வயது பெண்கள், பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் அதிகம் வரலாம். ஆண்களுக்குச் சிறு வயது முதல் முதிய வயது வரை எல்லா வயதிலும் வரும். நோயும் ஆண்களைவிட பெண்களுக்குக் கடுமையாக வரும். இந்த நோய் மிக லேசாக வந்தும் மறையலாம். அல்லது கவனிக்காமல் விடப்பட்டு முழுவதும் பரவி, 'கிட்னி ஃபெயிலியர்' வரையும் போகக் கூடும்.

Urinary Infection பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

நீர்த் தாரை (யூரினரி ட்ராக்) என்பது சிறு நீரகம், சிறுநீர்ப் பை மற்றும் இவ்விரண்டையும் இணைக்கும் குழாய் ஆகிய உறுப்புகளைக் கொண்டது.

இதில் எந்தப் பகுதியில் கிருமிகள் அதிகமாகித் தொற்று ஏற்பட்டாலும் அதற்கு சிறு நீர்த்தொற்றுநோய் என்பது பெயர். பொதுவாக சிறுநீர் அசுத்தமானதுதானே? அதில் கிருமிகள் கிடையாதா? என்ற சந்தேகம் எழலாம். அது நியமானது தான். பொதுவாக சிறுநீர்ப் பையில் கிருமிகள் எப்போதும் இருக்கும். அவை அளவில் மிகக்குறைவாகவும், உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவையாகவும் இருக்கும். அவை சிறுநீர் வழியாக வெளியே சென்றுவிடும். வெளியே சென்ற அளவு மீண்டும் தோன்றியிருக்கும். இந்தத் தொடர் நிகழ்ச்சியில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு சிறுநீர் வெளியே செல்லாமல் தேங்கி விட்டதென்றால் (கல், கட்டி போன்ற கோளாறுகளால்) தொற்று நோய் வருகிறது.

இந்த நோய் எப்படி வருகிறது?

பொதுவாக கிருமிகள் மூச்சுக் குழாய், வாய், தண்ணீர், உணவு மூலம் உடலுக்குள் பரவும். மலக்குடல், பெண் உறுப்பு மற்றும் ரத்தத்தில் கலந்து கிருமிகள் சிறுநீர்க் குழாயில் நோய் உண்டாக்கலாம். இந்த நோய். பெண்களுக்கு அதிகமாக வரக் காரணம் அவர்களுடைய சிறுநீர்க் குழாய், பெண் உறுப்பு, மலக்குடல் அமைப்புகள் - அருகருகே அமைந்திருப்பதால் நோய் பரவ எளிதாக இருக்கிறது. கருவுற்றிருக்கும்போதும், பிரசவத்தின்போதும், மற்றும் சோதனை முறைகளின்போதும் இந்நோய் உண்டாகிறது.

நீர்ச் சுருக்கு என்பது என்ன?

பொதுவாக சிறுநீரில் எரிச்சல் தோன்றினால், வீட்டில் பெரியவர்கள் இதை நீர்ச் சுருக்கு, நீர்க் கடுப்பு என்று பெயரிட்டு இதை சூடு, உஷ்ணம், என்று சொல்லி, ‘பேசாமல் எண்ணெய் தேய்த்துக் குளி' என்று சொல்லிவிடுவார்கள்.

அப்படியும் சரியாகாமல் போனால் குளிர்ச்சியான பொருள் இளநீர், தயிர் என்று வைத்தியம் செய்து காலம் தள்ளுவார்கள். இது மிகமிகத் தவறு. அதற்குள் நோய் அதிகமாகப் பரவி, முற்றிய நிலைக்குச் சென்றுவிட்டால் சிறுநீரகம் வேலை செய்யாமல் கூடப் போகலாம்.

இந்நோயின் அறிகுறிகள்

1.நீர் போகும்போது எரிச்சல்.

II. சொட்டுச்சொட்டாகச் சிறுநீர் போதல்

III. ரத்தம் கலந்து போதல்.

IV. குளிர் சுரம்.

V. பின் முதுகில், இடுப்பில் கடுமையான வலி

நோயைக் கண்டுபிடித்தல் எப்படி?

இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் நீங்கள் டாக்டரிடம் சென்றுவிட வேண்டும். அவர் தனது சோதனைகளின் மூலம் நோய் எந்த இடத்தில் உள்ளது? முழுவதும் பரவிவிட்டதா? என்பதை சோதனை செய்வார்.

இந்தச் சோதனைக்குப் பிறகு இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டி வரும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால நீர்ச்சுருக்கை குணமாக்க சில எளிய ஆலோசனைகள்!
Urinary Tract Infection

நோய் கடுமையாக இருந்து மருந்துகளுக்குக் கட்டுப்படவில்லை என்றால் சிறு நீர்த் தாரையில் கல், கட்டி போன்றவையும் இருக்கலாம். அதற்கு மேலும் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

பாதுகாப்பது எப்படி?

பொதுவாக சிறுநீரகம் மிகவும் முக்கியமான பாகம். அதைப் பாதுகாப்பது நமது கடமை. வீட்டிலும், வெளியிலும்,சிறுநீர் அறைகளைச் சுத்தமாக வைத்தல், நமது உடல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்தல், முக்கியமாக பிரசவத்திற்கு என்று நீங்கள் செல்லும் மருத்துவமனைகளில் டெலிவரி அறை மற்றும் வைத்திய அறைகள் சுத்தமாக இருக்கின்றனவா என்று முன்னெச்சரிக்கையாய் பார்த்தல் முதலியவை அவசியம்.

நோயின் அறிகுறிகள் தெரிந்தால், உடனே கவனிப்பது நல்லது. அதிக நாட்கள் கடத்தாமல், மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com