பற்களை வெண்மையாக்குவதற்கு எண்ணற்ற தயாரிப்புகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. ஆனால், இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை ப்ளீச் வகையை சேர்ந்தவை. அவை பற்களை வெண்மையாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்குவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தப் பதிவை அவசியம் படியுங்கள். நாம் தினமும் ஒரு நாளைக்கு கிடைப்பதையெல்லாம், பிடித்ததையெல்லாம் சாப்பிடுகிறோம். இது அத்தனையும் வயிற்றுக்குள் போய் செரிமானமாகிவிடும். ஆனால், மெண்டு சாப்பிடும் பற்களில் அதன் திசுக்கள் ஒட்டியேதான் இருக்கும்.
அதனால்தான் சாப்பிட்டவுடன் நன்றாக வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் அதை கடைபிடிப்பதில்லை. இதனால் பற்களில் அந்த உணவு படிந்து நாளாக நாளாக அது கரையாகி பற்சிதைவை ஏற்படுத்துகிறது. மேலும், கரை படிந்து அசிங்கமாக மாறுகிறது. இதனால் நம்மால் வெளியில் சிரித்து பேச இயலாமல் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வீட்டில் உள்ள இந்த ஐந்து பொருட்களைப் பயன்படுத்தினால் போதும்.
மஞ்சள்: இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மஞ்சளில் உள்ளன. இதனால் கறைகளை அகற்றவும், ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
கிராம்பு: கிராம்பு பொதுவாகவே பல் கூச்சம், பல் வலிக்கு பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய்யை சிக்கனமாகப் பயன்படுத்தினால் பற்களை வெண்மையாக்கும் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
துளசி: துளசி இலைகள் ஆண்டிமைக்ரோபியல் என்று பெயர் பெற்றவை. துளசி இலைகளை நசுக்கி பற்களில் வைத்தால் அவை இயற்கையாகவே வெண்மையாகி வாய் ஆரோக்கியமாக இருக்கும்.
வேம்பு: வேம்பு பல் பராமரிப்பு பொருட்களில் முக்கியமானதாக விளங்குகிறது. மேலும், இயற்கையாகவே இது பாக்டீரியா எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளதால் ஈறு கோளாறுகளை தடுக்கவும், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
ஸ்ட்ராபெரி: ஸ்ட்ராபெரியில் மாலிக் அமிலம் உள்ளது. இது ஒரு தாவரமாக இல்லாவிட்டாலும் பற்களில் இருந்து மேற்பரப்பு கறைகளை அகற்ற உதவுகிறது. இயற்கையாகவே பற்களை வெண்மையாக்க சிலர் ஸ்ட்ராபெரியை மசித்து பற்களில் தேய்ப்பது வழக்கம்.