

பெண்களை அதிக அளவில் தாக்கும் சிறுநீரகப் பிரச்சனை சிறுநீர்ப் பாதை தொற்று. இது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரையுள்ள குழாய், சிறுநீர்ப் பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் பாதை என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
நம்முடைய சிறுநீரக மண்டலம் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளே நுழைந்தாலும், அதை அழிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த தற்காப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்படும் போது கிருமித் தொற்று ஏற்படுகிறது.
பொதுவாக ஈகோலை பாக்டீரியா வால் சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுகிறது. இந்த கிருமி நம்முடைய குடலில் இருக்கக் கூடியது. மலம் கழிக்கும் போது இந்த கிருமி வெளியேற்றப் படுகிறது. பெண்களுக்கு அவர்கள் உடல் அமைப்பு காரணமாக இந்த கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது. உடல் உறவின் மூலமும் இந்தக் கிருமித் தொற்று ஏற்படுகிறது.
பொதுவான அறிகுறிகள்
சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறிய அளவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் மங்கலாக இருப்பது, சில சமயங்களில் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரில் மாற்றம், பெண்களுக்கு இடுப்பு வலி, ஆண்களுக்கு மலக்குடல் சார்ந்த வலி, காய்ச்சல் என பலவிதங்களில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டால் மேல் முதுகு மற்றும் பக்க வாட்டில் வலி இருக்கும். கடுமையான காய்ச்சல் இருக்கும். வாந்தி, குமட்டல் இருக்கலாம்.
சிறுநீர்ப் பையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் இடுப்புப் பகுதியில் அழுத்தம், கீழ் வயிற்று பகுதியில் அசௌகரியம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை இருக்கும்.
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
யூரின் கல்ச்சர் டெஸ்ட் பரிந்துரைக்கப்படும். இதன் அடிப்படையில் பாக்டீரியா எவ்வளவு உள்ளது என்று கண்டறியப் பட்டு அதற்கேற்ப ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். டாக்டர் அறிவுறுத்திய கால அளவில் மருந்துகளை தவறாது எடுப்பது அவசியம்.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைத் தவிர்க்க
போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். இதனால் சிறுநீர் பாதையில் உள்ள பாக்டீரியா அடித்து செல்லப்படும்.
பெண்கள் காலைக் கடன் முடித்த பிறகு கவனத்துடன் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனால் ஆசன வாயிலிருந்து கிருமி, பிறப்புறுப்பில் நுழைவது தடுக்கப்படும்.
சிறுநீரகத்தை காக்க
சிறுநீரக பிரச்சனை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்சனை முற்றிய பிறகுதான் தெரிய வரும். சிறுநீரகத்தை பாதுகாக்க ஏழு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்
ரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டும்
உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் முதல் எதிரி. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை தடுக்கலாம்.
சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும்
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் சிறுநீரகம் பாதிப்புக்கும் ஆளாக நேரிடும். எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
ஆரோக்கிய உணவு பழக்கம் அவசியம்
உடல் உழைப்பின்றி, உடற்பயிற்சியின்றி இருப்பது, கொழுப்பு மிக்க உணவுகளை உண்பது, சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாதது, போன்றவை உடற்பருமனை அதிகரிக்கச் செய்யும். இதை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை குறைத்தல், மன அழுத்தம் இன்றி இருத்தல் போன்றவை நோய் வருவதை தடுக்கும்.
போதுமான அளவு நீர் அருந்துதல் வேண்டும்
ஏசி அறையில் இருந்தாலும் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேறி சிறுநீரக இயக்கம் சீராக நடக்க இது உதவும்.
புகை பிடித்தல் மது அருந்துதல் தவிர்க்க வேண்டும்
புகை பிடிக்கும் போது சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்கு செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். மேலும் புகைப்பழக்கம் சிறுநீரக புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
தலைவலி, மூட்டுவலி, முதுகுவலிக்கு எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். எனவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமாக நீண்ட நாட்கள் மருந்துகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக நோய் வருவதை முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே 40வயதை கடந்தவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், மரபு ரீதியான சிறுநீரக பிரச்சினை உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்சனை உடையவர்கள், முன்பே சிறுநீரக தொற்று ஏற்பட்டவர்கள் சீரான கால இடைவெளியில் சிறுநீரக பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.
இவை யாவும் என் மகன் பொது நல மருத்துவர் பிரகதீஷ் MBBS, சொன்னதை தொகுத்து எழுதியுள்ளேன்.