

உடலில் திடீரென்று புதிய மச்சங்கள் தோன்றுவது பெரும்பாலான நேரங்களில் சாதாரணமானதாக இருந்தாலும், குறிப்பிட்ட வயதிற்கு மேல், முக்கியமாக 40 வயதிற்கு மேல் தோன்றும் புதிய மச்சங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள மச்சங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து கூடுதல் கவனம் தேவை.
ஏனெனில் இது அரிதான சந்தர்ப்பங்களில் மெலனோமா (Melanoma) எனப்படும் சருமப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக வெயிலின் தாக்கம் (UV கதிர்கள்), மரபணு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகப் புதிய மச்சங்கள் தோன்றலாம். எனினும் சில மச்சங்கள் சருமப் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மச்சம் என்பது நம் உடலின் ஒரு இயற்கையான அடையாளம். சிலருக்கு முகத்தில் இருக்கும் மச்சம் அழகைக் கூட்டும். ஆனால் சிலருக்கோ அதுவே அழகைக் கெடுப்பதாக இருக்கலாம். குறிப்பாக முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பெரிய அளவிலான அல்லது தேவையில்லாத இடங்களில் மச்சம் வரும் பொழுது அது பலரது தன்னம்பிக்கையை குறைக்கும் விதமாக அமைகிறது. மச்சங்களை நாமே எடுக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மச்சங்களை அகற்றுவது கூடாது.
நமது சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கும் செல்களுக்கு 'மெலனோசைட்டுகள்' என்று பெயர். இந்த செல்கள் சருமம் முழுவதும் பரவி இருக்காமல், உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றாகக் குவியும் பொழுது தான் அது மச்சமாக மாறுகிறது.
ஒரு மச்சம் ஆபத்தானதா இல்லையா என்பதை சுய பரிசோதனை செய்ய, உலகளவில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ABCDE விதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Asymmetry - சீரற்ற வடிவம்:
மச்சத்தை நடுவில் பாதியாகப் பிரித்தால், இரண்டு பக்கங்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் இருப்பது.
Border - ஒழுங்கற்ற விளிம்புகள்:
மச்சத்தின் ஓரங்கள் வட்டமாக இல்லாமல் சொரசொரப்பாக, அலை அலையாக அல்லது மங்கலாகக் காணப்படுவது.
Color - நிற மாற்றம்:
மச்சம் ஒரே சீரான நிறத்தில் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இல்லாமல், ஒரே மச்சத்திற்குள் பல நிறங்கள் சிவப்பு, வெள்ளை, நீலம், கரும்பழுப்பு போன்று கலந்து காணப்படுவது.
Diameter - அளவு/விட்டம்:
மச்சத்தின் அளவு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போவது. குறிப்பாக பென்சிலின் பின்புறம் உள்ள ரப்பரை விட அதாவது 6 மில்லி மீட்டருக்கும் மேல் பெரியதாக மாறுவது.
Evolving - மாற்றமடைதல்:
மச்சத்தின் அளவு, வடிவம், நிறம் அல்லது தடிமனில் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் விரைவான மாற்றங்கள் ஏற்படுவது.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
மச்சத்தில் இருந்து திடீரென ரத்தக் கசிவு அல்லது நீர் வடிதல் ஏற்பட்டால்
மச்சம் உள்ள பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு, வலி, எரிச்சல் அல்லது புண் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
மச்சம் உள்ள இடம் தடித்து, கடினமாக மாறுவது
மச்சத்தைச் சுற்றியுள்ள தோல் பகுதி சிவந்து வீங்குவது
மச்சத்தின் மேல் பகுதி செதில் செதிலாக மாறுவது அல்லது காயம்படாமல் தானாகவே ஆறாத புண்ணாக மாறுவது
உடலில் உள்ள ஏதேனும் ஒரு மச்சம் மற்ற மச்சங்களை விட முற்றிலும் வித்தியாசமாகவோ அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுடனோ இருந்தால் மச்சத்தைக் கிள்ளுவது, சுண்ணாம்பு வைப்பது போன்ற சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
உடலில் உள்ள மற்ற மச்சங்களை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஒரு புதிய மச்சம் தோன்றுவது என உடலில் திடீரென புதிய மச்சம் தோன்றி, அதில் இப்படி மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் ஏதேனும் தெரிந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக ஒரு சரும நலம் சார்ந்த மருத்துவரை (Dermatologist) அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் சருமப் பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த முடியும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference