.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சிறிதுகாலம் தொற்று நோய் பரவல்கள் குறித்த செய்திகள் நம்மைவிட்டு விலகியிருந்தன. ஆனால், சமீப நாட்களில் இது மீண்டும் உலகளவில் வெவ்வேறு நோய்களின் பெயரில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. சரி... இதற்கு ஒரு முடிவு இல்லையென்றாலும்; சற்று நம்மைப்பற்றி நாம் கொஞ்சம் அறிந்துகொள்வோம்.
இந்தியாவில் உள்ள தடுப்பூசி முறைகள் (Indian Vaccine Awareness):
இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம் (Universal Immunization Programme (UIP)) உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இதனால் ஆண்டுதோறும் சுமார் 2.6 கோடி குழந்தைகளுக்கு இலவசத் தடுப்பூசிகளை வழங்கமுடிகிறது. பிறக்கும்போதே குழந்தைகளுக்கு BCG (காசநோய்க்கானது), OPV (வாய்வழி போலியோ) மற்றும் ஹெபடைடிஸ்(Hepatitis B) போன்ற தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தையின் முதல் வயதில் கூடுதலாக DPT (டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ்(tetanus), தட்டம்மை-ரூபெல்லா, ரோட்டா வைரஸ், நிமோகாக்கல்; பின் நோய் பரவலாக உள்ள பகுதிகளில் ஜப்பானிய மூளை அழற்சி (Japanese encephalitis) போன்ற தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.
மொத்தத்தில் UIP திட்டத்தின்கீழ் 12 நோய்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தத் தடுப்பூசிகள் பிறந்த குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன் தரவுகள் U-WIN என்ற இணையதளத்தில் 2023 ஆண்டில் இருந்து சேமிக்கப்படுகின்றன.
பெரியவர்களுக்கான தடுப்பூசித் திட்டங்கள்: 20 முதல் 80 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு நிலைமை வேறுபட்டது. இவர்களில் பலரும் UIP திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு பிறந்தவர்கள். அவர்கள் போலியோ, DPT போன்ற ஒரு சில தடுப்பூசிகளை மட்டுமே கட்டாயமாக பெற்றிருக்கக்கூடும். இதன் பலனால் இந்தியா 2014-ல் போலியோ இல்லாத நிலையை அடைந்தது.
ஆனால், வயதானவர்களுக்கு ரோட்டா வைரஸ் அல்லது நிமோகாக்கல் போன்ற புதிய தடுப்பூசிகள் கிடைக்காமல் போயிருக்கலாம். காரணம் அவர்கள் பிறந்த ஆண்டு அல்லது அந்த நேரத்தில் இருந்த நோய் தடுப்பு திட்டங்களைப் பொறுத்து அவர்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் இருந்தன.
தடுப்பூசிகள் எல்லா நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றனவா?:
தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை. ஆனால், அவை உலகளாவிய பாதுகாப்பு அல்ல. அவை தட்டம்மை அல்லது போலியோ போன்ற குறிப்பிட்ட நோய்க்கிருமிகளை மட்டுமே தடுக்கின்றன. ஆனால், உலகளவில் உள்ள எல்லா நோய்த்தொற்றுகளையும் தடுக்கமுடியாது. உதாரணமாக எச்.ஐ.வி அல்லது சில புற்றுநோய்கள் போன்ற நோய்களுக்கு இன்னும் தடுப்பூசி இல்லை. இருப்பினும் தடுப்பூசிகள் உலகளவில் பெரியம்மை, போலியோ மற்றும் டிப்தீரியா போன்ற நோய்களை ஒழித்துள்ளன அல்லது பெருமளவில் குறைத்துள்ளன.
எந்த நாடுகள் அதிக தடுப்பூசிகளைக் கட்டாயமாகியுள்ளன?:
தங்கள் குடிமக்களின் பாதுகாப்பிற்காக அதிக தடுப்பூசிகளைக் கட்டாயமாக உபயோகிக்கும் நாடுகளாக பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, லாட்வியா மற்றும் கோஸ்டாரிகா ஆகியவை இருக்கின்றன. இந்த நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் தடுப்பூசிகளைச் செலுத்த அதிக கால அட்டவணைகளைப் பின்பற்றுகின்றன.
இதனால் தட்டம்மை, போலியோ போன்ற குழந்தைப் பருவ நோய்களுக்கு மட்டுமல்லாமல்; HPV, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் மெனிங்கோகாக்கல்(meningococcal) தொற்றுகளுக்கும் தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியா குழந்தைகளுக்கு 12 தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் அதைவிடப் பரந்த அளவிலான தடுப்பூசித் திட்டங்களையும் காட்டாயமாக்கி உள்ளன.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒரு விழிப்புணர்விற்காகவே சொல்லப்பட்டுள்ளன. இதில் சந்தேகம் அல்லது உங்களின் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)