வேகஸ் நரம்பு (Vagus nerve) என்பது மூளை முதல் உடல் உறுப்புகள் வரை பரவி இதயத்துடிப்பு, செரிமானம், மனநிலை மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான நரம்பாகும். இது 'பத்தாவது மண்டை நரம்பு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நரம்பு மூளையிலிருந்து புறப்பட்டு உடல் உறுப்புகளுக்கு உணர்ச்சி மற்றும் மோட்டார் சமிக்கைகளை கடத்துகிறது.
மூளையையும் உடலையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ள நரம்புப் பாதையே வேகஸ் நரம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த வேகஸ் நரம்பில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, மனதெளிவு குறைவது போன்ற உடல் அறிகுறிகள் ஏற்படும். வேகஸ் நரம்பை வலுப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் பி12, மெக்னீசியம், சோடியம், ஒமேகா 3, கோலைன் ஆகியவையாகும்.
வேகஸ் நரம்பின் முக்கிய செயல்பாடுகள்:
இதயத்துடிப்பை கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல்வேறு பகுதிகளில் நகர்வதற்கு துணை செய்யும். சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்கு துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளை இந்த நரம்புகள் செய்கின்றன.
முக்கிய ஊட்டச்சத்துக்கள்:
a) வைட்டமின்கள்: பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் (பி1, பி6, பி12) போன்றவை நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதை மாற்றம் செய்ய இவை உதவுகின்றன. இது நரம்பு செல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
b) துத்தநாகம்: வேகஸ் நரம்பின் செயல்பாட்டிற்கு சுத்தநாகம் மிகவும் அவசியம் என்று கருதப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
c) ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்: நரம்பு செல்களை பாதுகாக்கவும், அழற்சியை குறைக்கவும் இவை உதவுகின்றது. மீன், ஆளிவிதை மற்றும் வால்நட் போன்ற ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
d) ஆன்டி ஆக்சிடன்ட்கள்: வைட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் பிற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நரம்பு திசுக்களை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்:
a) பருப்பு வகைகள், பயறுகள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் பி வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.
b) பச்சை காய்கறிகள், கீரை, ப்ரோக்கோலி போன்றவை விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை.
c) பாதாம், வால்நட், ஆளிவிதை, சியா விதைகள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் ஈ நிறைந்தவையாகும்.
d) சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
e) புரதச்சத்து நிறைந்த முட்டைகள் வேகஸ் நரம்பை வலுப்படுத்த உதவும்.
f) அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைப்பதற்கு சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அத்துடன் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)