

இன்றைய நவீன வாழ்க்கை முறை நமக்கு பல வசதிகளைக் கொடுத்திருந்தாலும், கூடவே சில உடல்நலப் பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளது. கம்ப்யூட்டர் முன் நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை பார்ப்பது, அல்லது கடைகளில் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது நம்மில் பலரின் வாடிக்கை.
இதன் விளைவாக, கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாலையில் வீடு திரும்பும்போது கால்கள் வீங்கிப்போவது, தசைப் பிடிப்பு, மற்றும் நாளடைவில் தொடைக்குக் கீழே பச்சை நிறத்தில் நரம்புகள் சுருண்டு (Varicose Veins) தெரியும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வு காண பெரிய ஜிம்முக்குச் செல்ல வேண்டாம், சில எளிய பயிற்சிகள் மற்றும் பழக்கவழக்கங்களே போதும்.
நாள் முழுவதும் ஒரே நிலையில் இருக்கும்போது, புவிஈர்ப்பு விசை காரணமாக, ரத்தம் கால்களிலேயே தேங்க ஆரம்பிக்கிறது. ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு பம்ப் செய்ய நமது கால் தசைகள் இயங்க வேண்டும். நாம் அசையாமல் இருப்பதால், அந்த ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, நரம்புகள் பலவீனமாகி வீங்குகின்றன.
இதைத் தவிர்க்க, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை, ஒரு சில நிமிடங்கள் எழுந்து நடப்பது, அல்லது இருந்த இடத்திலேயே கால்களை அசைப்பது அவசியம். மேலும், ரத்த ஓட்டத்தை பாதிக்கும் வகையில் தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் மிக இறுக்கமான ஆடைகள் அணிவதையும் தவிர்க்க வேண்டும்.
இது மிகவும் எளிமையான பயிற்சி. நீங்கள் நின்றுகொண்டிருக்கும்போதே இதைச் செய்யலாம். நேராக நின்று கொண்டு, உங்கள் குதிகால்களை மட்டும் உயர்த்தி, கால் விரல்களின் நுனியில் நிற்கவும். ஒரு இரண்டு வினாடிகள் அப்படியே இருந்து, பின் மெதுவாகக் குதிகால்களைக் கீழே இறக்கவும்.
இதுபோல 20 முறை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யுங்கள். இந்தப் பயிற்சி உங்கள் கெண்டைக்கால் தசைகளை இயக்கி, தேங்கியிருக்கும் ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு பம்ப் செய்ய உதவும்.
நீங்கள் சேரில் உட்கார்ந்திருக்கும்போதே இந்தப் பயிற்சியைச் செய்யலாம். உங்கள் கால்களை நேராக நீட்டிக்கொள்ளுங்கள். இப்போது, உங்கள் பாதங்களை மட்டும் முன்னோக்கி நீட்டுங்கள், பிறகு உங்களை நோக்கி உள்நோக்கி இழுங்கள். இப்படி மாறி மாறி 15 முதல் 20 முறை செய்யுங்கள். இது கணுக்கால் மூட்டுகளுக்கு நெகிழ்வுத்தன்மையைக் கொடுப்பதோடு, கீழ் கால்களில் ரத்த ஓட்டத்தை உடனடியாக மேம்படுத்தும்.
ஒரு நாளின் முடிவில், சோர்வாக வீடு திரும்பியதும் இதைச் செய்யுங்கள். தரையில் படுத்துக்கொண்டு, உங்கள் இடுப்புப் பகுதியை சுவருக்கு அருகே நகர்த்துங்கள். இப்போது உங்கள் இரண்டு கால்களையும் சுவற்றில் நேராக மேல்நோக்கி வைத்துச் சாய்த்துக் கொள்ளுங்கள்.
கைகளைத் தளர்த்தி, கண்களை மூடி, 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே இருங்கள். இது கால்களில் தேங்கிய ரத்தத்தை மீண்டும் இதயத்தை நோக்கிச் செலுத்த இது ஒரு சிறந்த வழியாகும். கால்களில் உள்ள வீக்கமும் உடனடியாகக் குறையும்.
வீங்கிய கால்களும், சுருண்ட நரம்புகளும் உங்கள் உடல் உங்களுக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கை மணி. இந்தப் பிரச்சனைகள் பெரிதாவதற்கு முன், இந்த எளிய பயிற்சிகளை உங்கள் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.