
சமீபத்தில் மும்பையில் , வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், தனக்கு அடிக்கடி சோர்வு, கை மற்றும் கால்களில் கூர்மையான எரிச்சல் மற்றும் குத்தல் போன்ற உணர்வு ஏற்படுவதாக மருத்துவரிடம் புகார் கூறியிருந்தார். அவரது உடல் பலவீனங்களுக்காக சோதனை செய்ததில் அவருக்கு HbA1c மூன்று மாத சராசரி அளவு 9.2 ஆக இருந்தது. அவரது உடலில் வைட்டமின் அளவுகளும் கடுமையான அளவில் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர் பல ஆண்டுகளாக நீரிழிவு மாத்திரையை மட்டும் எடுத்து வந்துள்ளார். பொதுவாக நீரிழிவு அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, அவை உடலில் ஊட்டச்சத்து பற்றாக் குறையை ஏற்படுத்தும். அந்த நபர் மெட்பார்மின் ரக மாத்திரையை பல ஆண்டுகளாய் வைட்டமின் பி 12 மாத்திரை இல்லாமல் தனியாக சாப்பிட்டு வந்துள்ளார்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள அதிகளவு சர்க்கரையை, சிறுநீர் மூலமாக வெளியேற்ற சிறுநீரகம் அதிகமாக வேலை செய்கிறது. இதனால் அதிகளவு சிறுநீர் வெளியேறி 'ஆஸ்மோடிக் டையூரிசிஸ்' என்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லும்.
இந்த நிலையில் சிறுநீரகங்கள் அதிகளவு நீரினை வெளியேற்றுகின்றன. சிறுநீருடன் வைட்டமின் பி1, வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி போன்ற நீரில் கரையக் கூடிய வைட்டமின்களையும் வெளியேற்றுகின்றன. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகளவில் வைட்டமின் இழப்பு ஏற்படுகிறது.
நீரிழிவு நோய், இரைப்பை அழற்சியை கொண்டு வரும். இதனால் வயிறு காலியாக அதிக நேரம் எடுக்கும். அதனால் செரிமானம் பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் பாதிக்கிறது. பொதுவான சில நீரிழிவு நோய் மருந்துகளை நீண்ட காலமாகப் பயன்படுத்தினால், அது குடலில் வைட்டமின் பி12 உறிஞ்சுதலை குறைக்கிறது. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு சோர்வு மற்றும் கை கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில் பழங்கள் மற்றும் பால் பொருட்களை தவிர்க்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். வைட்டமின் டி குறைபாடு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு செயலிழப்புடன் தொடர்புடையது. குறிப்பாக நீரிழிவு நோய்க்கு மெட்ஃபோர்மின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு பொதுவானது, அதிகளவு வைட்டமின் குறைபாடுகள் அவருக்கு எப்போதும் சோர்வினை நரம்புகளில் சேதங்களையும் ஏற்படுத்தும்.
வைட்டமின் குறைபாடுகள் சோர்வு, நினைவாற்றல் இழப்பு மற்றும் மோசமான நரம்பியல் நோயை ஏற்படுத்தக் கூடியது . வைட்டமின் பி1 குறைபாடு நீரிழிவு நோய், நரம்பியல் மற்றும் இதய பிரச்சினைகளை மோசமாக்கும். மெக்னீசியம் இன்சுலின் சுரக்க ஒரு முக்கியமான துணை காரணியாகும். அதனால் மெக்னீசியம் உடலுக்கு தேவையானது.
வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு வைட்டமின் பி12 ஊசிகள் மற்றும் வைட்டமின் டி மருந்துகள் கொடுப்பட்டது. அவருக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் கொடுத்து, நீரிழிவு கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடங்கிய பிறகு, அவரது நரம்பியல் அறிகுறிகள் நான்கு மாதங்களில் கணிசமாகக் குறைந்தன.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துடன் மருத்துவரின் ஆலோசனை படி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், வைட்டமின் பற்றாக்குறை ஏற்படாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)