சிவப்பு மிளகாய் Vs மிளகு: என்ன பேசிக்கிறாங்க...? கேட்கலாம் வாங்க...

Pepper and red chillies
Pepper and red chillies
Published on
mm
mm

"அன்றைக்கு எப்பவும் போல் எஜமானி அம்மா மளிகை சாமான்களை வாங்கி எல்லாத்தையும் டப்பாவில் கொட்டி கொண்டிருந்தார்கள். என்னையும்...அதாவது நான் தாங்க சிவப்பு மிளகாய்.. ஒரு டப்பால போட்டாங்க. அப்புறம் சீரகம், கடுகு, பருப்பு எல்லாத்தையும் போட்டாங்க. கடைசியில் என்ன ஆச்சரியம்! என் பக்கத்தில் மிளகையும் ஒரு டப்பாவில் போட்டு வெச்சாங்க!

எங்க எஜமானி அம்மா மிளகை வாங்கவே மாட்டாங்க. எஜமானி அம்மாவோட தாயாரும், பாட்டியும் இருந்தப்ப என்னை வாங்கவே மாட்டாங்க..., பூரா அந்த மிளகை தான் அவங்க தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடினாங்க. ஆனால், இன்றைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.... மிளகை வாங்கி இருக்காங்க. சரி பார்ப்போம்..." என்று சொல்லிய படியே மிளகாய் மெதுவாக மிளகிடம் பேச ஆரம்பித்தது.

மிளகாய்: என்ன மிளகு நண்பா! ரொம்ப வருடத்திற்கு பிறகு வந்திருக்கிறியே.

மிளகு: நான் நல்லா தான் இருக்கேன், நீ எப்படி இருக்கிற?

மிளகாய்: எனக்கு என்னப்பா...ஜம்முனு இருக்கேன். உன்னை நினைச்சா தான் பாவமா இருக்கு.

மிளகு: ஏன்? எனக்கென்ன குறை?

மிளகாய்: உன்னை தான் இப்பெல்லாம் யாரும் அதிகமாக உபயோகப் படுத்துவதே இல்லையே.

மிளகு: யார் சொன்னார்கள் உனக்கு? இன்னமும் என்னை ரெகுளராக சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். என்னை பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக தினமும் என்னை சேர்த்து கொள்கிறார்கள்.

மிளகாய்: அட போப்பா..உன்னை யாரு விரும்புறாங்க.. என்னை தான் எல்லோரும் விரும்புறாங்க. தினம் பண்ணுகிற காய், குழம்பு சாம்பார் கூட்டு அப்புறம் க்ரேவி ஸப்ஜி, பிரியாணி, ஊறுகாய் இப்படி எல்லா உணவிலும் என்னை தானே போடறாங்க.

மிளகு: இல்லை என்று சொல்லலை. ஆனால் என்னோட அருமையை தெரிந்தவர்கள் முடிந்தவரை என்னையும் சேர்த்து கொள்கிறார்கள் என்று தான் நான் சொன்னேன்.

மிளகாய்: நீ என்ன‌ வேணும்னாலும் சொல்லு, எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், மக்களுக்கு நான் தான் கெத்து. Momo க்கு தொட்டுக்க ஒரு சட்னி பண்றாங்க, தெரியுமா உனக்கு, அதில் பூண்டோடு என்னை சேர்த்து அரைத்து சாப்பிடுறாங்க. அவர்களுக்கு என்ன ஆனந்தம். ஆனால் உன்னை சாப்பிட்டில் சேர்த்தால் இத்தனை ருசி வருமா??

மிளகு: ருசி வருமோ வராதோ அது எனக்குத் தெரியாது. ஆனால், ஆரோக்கியம் கிடைக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். வயிறு உப்புசம் குறையும். உனக்கு ஒன்னு தெரியுமா? என்ன தான் உன்னை தினமும் சாப்பாட்டில் சேர்த்தாலும் தவசம் அன்னிக்கு பண்ணும் சாப்பாட்டில் என்னை மட்டும் தான் சேர்ப்பார்கள். உன்னை கொஞ்சம் கூட சேர்க்க மாட்டார்கள்.

மிளகாய்: ஆமாம் பா..ஆமாம்..அது ஏன்? என்னை தவச சாப்பாட்டில் சேர்ப்பதில்லை. அப்புறம் இதையும் சொல்லு, என்னை சாப்பாட்டில் சேர்த்தால் ஜீரணமாகாதா??

மிளகு: brother, நம் இந்தியர்களின் பராம்பரியமாக இருந்தது நான் தான். என்னை முதன்முதலில் நம்ம தென்னிந்தியாவில் தான் உற்பத்தி செய்தார்கள். ஆனால், உன்னை அமெரிக்கா நாட்டினர் உற்பத்தி செய்தார்கள். நீ வெளி நாட்டினரால் தான் அறிமுகமானாய் இந்தியாவிற்கு. இப்ப புரியுதா உனக்கு?? ஏன் தவச சாப்பாட்டில் உன்னை சேர்ப்பதில்லை என்று.

இதையும் படியுங்கள்:
அலாரத்தை அடிக்கடி Snooze செய்துவிட்டு தூங்குவது ஆரோக்கியமானதா?
Pepper and red chillies

அப்புறம் உன்னை சாப்பிட்டாலும் ஜீரணமாகும். ஆனால், உன்னை அதிகமாக சேர்த்து கொண்டால் மூலம், அல்சர் போன்ற வியாதிகள் வரும். உன்னை தாராளமாக சேர்த்து கொள்ளலாம். ஆனால் அளவோடு சேர்த்து கொண்டு என்னையும் இடையிடையே சேர்த்து கொண்டால் மக்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மிளகாய்: ஓ, இத்தனை விஷயம் இருக்கா நண்பா?

மிளகு: ஆமாம் நண்பா.. உனக்கு தெரியுமா? உங்க எஜமானி அம்மாவோட பையன் ரொம்ப குண்டாயிட்டான், ஒரே பிரச்சனை. டாக்டர் உடனே எடையை குறைக்க வேண்டும், இல்லை என்றால் heart attack வர வாய்ப்பு இருக்கு என்று சொல்லி விட்டார். அதனால்தான் உங்க எஜமானி அம்மா என்னை வாங்கி இருக்காங்க. தினமும் கொஞ்சமாக என்னை சேர்த்தால் எடை குறையும்.

மிளகாய்: ஓ, அப்படியா விஷயம். இப்ப எனக்கு நல்லாவே புரிந்தது நண்பா... இத்தனை நாளா நான் தான் உசத்தி என்று கர்வமாக இருந்தேன். ஆனால், இப்போது தான் எனக்கு உண்மை தெரிந்தது நீ தான் ராஜா பா. நீ எப்பவும் என் கூடவே இருப்பா.

இதையும் படியுங்கள்:
ஹார்மோன்களின் அட்டகாசமும் அவற்றை திறம்பட ஆளும் முறைகளும்!
Pepper and red chillies

மிளகு: என் கையில் எதுவும் இல்லை நண்பா... மக்கள் தான் என்னையும் தினமும் கொஞ்சம் சேர்த்து கொள்ள வேண்டும். நீயே கொஞ்சம் சிபாரிசு செய்தா நல்லா இருக்கும்.

மிளகாய்: அதற்கென்ன... இப்பவே உனக்காக நானே சொல்கிறேன்...

"மக்களே...என்னை தான் தினமும் எல்லா உணவிலும் சேர்த்து கொள்கிறீர்கள். ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என்னுடன் என் நண்பனாகிய மிளகையும் தினமும் சிறிதளவு சேர்த்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்!நன்றி!"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com