உடலுக்குப் பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தரும் ஊட்டச்சத்து என்றால் என்றால் அது வைட்டமின் ஈ தான். இந்த வைட்டமின் ஈ கொழுப்பில் கரையும் தன்மையுடையது. முக்கியமாக, உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் ஈ உதவுகிறது. மேலும், வைட்டமின் கே உற்பத்திக்கும் இந்த வைட்டமின் உதவி செய்வதால் காயங்கள், புண்கள் போன்றவற்றில் ரத்தம் உறைவதற்கும் மறைமுகமாக உதவுகிறது. இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைவதால் உண்டாகும் இதய நோய்களுக்கும், இதய இரத்த அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வைட்டமின் ஈ பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக, இனவிருத்திக்கும் வைட்டமின் ஈ உதவுவதாகக் கூறப்படுகிறது.
குறை மாத குழந்தைகளைப் பிழைக்க வைப்பதற்கு வைட்டமின் ஈ பெருமளவில் பயன்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் ஈ குறைந்துள்ள குறைமாத குழந்தைகளிடத்தில் கொழுப்புச்சத்தை உட்கிரகித்துக்கொள்ளும் திறன் குறைகிறது. கருவுற்றிருக்கும் தாய் போதுமான வைட்டமின் ஈ உட்கொள்ளாததால் பிறக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஈ சத்து குறைபாடு ஏற்படுகிறது.
பெரியவர்களிடமும் வைட்டமின் ஈ சத்து குறைந்தால் கொழுப்பு சத்தும் குறைந்துபோகும். சருமப் பிரச்னைகளில் வைட்டமின் ஈ முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, உலர்ந்த சருமம் உடையவர்களுக்கும், வெளிச் சருமத்தில் சுருக்கம் கொண்டவர்களுக்கும் இது பெரிதாக உதவுகிறது. மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் தீர்வதற்கு இந்த வைட்டமின் ஈ பெரிதும் பயன்படுகிறது. இது வைட்டமின் ஏ உடலில் சேர்வதற்கும் பயன்படுகிறது. வைட்டமின் ஈ மருந்துடன் இரும்புச் சத்தும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகிறது.
வைட்டமின் ஈ குறைபாடு: எந்த வைட்டமின் குறைபாடு இருந்தாலும், வைட்டமின் ஈ குறைபாடு இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். காரணம், இந்த வைட்டமின் குறைந்தால் முக்கியமான பிரச்னைகள் பலவும் தோன்றுவதற்கு வழிவகுத்துவிடும். குறிப்பாக, பல்வேறு ஜீரணக் கோளாறுகள், ஜீரணமான உணவை சரிவர கிரகிக்காத காரணத்தால் கொழுப்பு மற்றும் கொழுப்பில் கரையும் பல்வேறு வைட்டமின்கள் வீணாகின்றபோதும் இக்குறைபாடு ஏற்படலாம்.
வைட்டமின் ஈ குறைபாட்டால், அதன் பயன் கிடைக்காமல் போவதோடு பல்வேறு நோய்களும் உண்டாகும். குறிப்பாக, இதய நோய்கள், புண் ஆறாமல் இருத்தல், மலட்டுத் தன்மை, மாதவிடாய் கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. கல்லீரல் பாதிப்பு மற்றும் தசைகள் வலுவிழந்து பொலிவு குறைந்து விடுதல் போன்றவையும் ஏற்படலாம்.
மேலும், வைட்டமின் ஈ குறைபாட்டால் முதுகு தண்டுவட பகுதியின் பின்பகுதி பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. இதனால் பல்வேறு உணர்ச்சிகளைப் பெற முடியாத சூழல் ஏற்படும். சிலருக்கு நடக்க இயலாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த வைட்டமின் தினசரி நாம் பயன்படுத்தும் உணவு எண்ணெய்களில் இருந்தே நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது.
வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகள்: கோதுமை, ஓட்ஸ் போன்ற முழுமையான தானியங்களில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. மேலும், கோதுமை முளை எண்ணெய், சோள முளை எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகளவு உள்ளது. கீரை வகைகள், முட்டை, கொட்டைகள், வித்துக்கள் போன்றவற்றிலும் போதுமான அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது தவிர, தாவர எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கொழுப்பில் வைட்டமின் ஈ நிறைவே உள்ளது. மாமிச உணவுகளில் இது குறைந்த அளவே காணப்படுகிறது.