

இன்றைய வாழ்க்கை வேகமா ஓடிக்கிட்டிருக்கு. ஆனா அந்த வேகத்துக்கு நம்ம உடம்பும் மனசும் தயாரா இருக்கா அப்படின்னா சந்தேகம்தான். காலைல இருந்து இரவு வரை நாற்காலியும், திரையும் தான் நம்ம கூட. உடம்பு அசைய நேரமில்ல, மனசுக்கு ஓய்வும் இல்ல. இப்படிப்பட்ட சூழலில் நமக்கு கிடைக்குற எளிய, நம்பகமான தோழன் தான் நடைபயிற்சி.
நடைபயிற்சிக்கு (Walking exercise) பெரிய ஏற்பாடுகள் தேவையில்லீங்க. ஜிம் கட்டணம், கருவிகள், பயிற்சியாளர் எதுவும் இல்லாம, ஒரு ஜோடி காலும் அந்தக் காலுக்கு பொருத்தமான Shoes உடன் கொஞ்சம் நேரமும் இருந்தா போதும்.
நாற்பது வயதுக்கு மேல் எந்த டாக்டர் கிட்டே போனாலும், "வாக்கிங் போங்க!" என்று சொல்வாங்க. அதற்காக உடனே வேக வேகமா கையை வீசிகிட்டு ஐந்து கிலோ மீட்டர் நடப்பது, அப்பறம் என்னாலே தாங்க முடியாத கால் வலி என்று விட்டு விடுவது அல்ல நடைபயிற்சி.
தினமும் காலை அல்லது மாலை அரை மணி நேரம் நிதானமா நடக்க ஆரம்பிச்சாலே நம்ம உடம்புல சின்னச் சின்ன மாற்றங்கள் தெரியும். மூச்சு சீராகும், உடல் லேசா ஆகும், இரவு தூக்கம் ஆழமா வரும்.
நடைபயிற்சியோட இன்னொரு பெரிய பலன் மனசுக்கு கிடைக்குற அமைதி. ரோட்டோர மரங்கள், பறவைகளோட சத்தம், காலை காற்று இவையெல்லாம் சேர்ந்து மனசுல இருந்த பாரங்களை மெதுவா இறக்கிடும். பல நேரங்களில் நடக்குறப்போ தான் நம்ம வாழ்க்கை பற்றிய தெளிவான எண்ணங்களும் வருது.
நடைபயிற்சி ஒரு உடற்பயிற்சி மட்டும் இல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. நம்ம உடம்புக்காக நாமே எடுத்துக்கிற சின்ன கவனிப்பு. இந்த சின்ன பழக்கம் தான் நாளைக்கு பெரிய நலனாக மாறுது. அதனாலே மெதுவா தொடங்கி, தொடர்ந்து நடக்கக் கற்றுக்கிட்டா, வாழ்க்கையும் நம்ம கூட சேர்ந்து நிதானமா நடக்க ஆரம்பிக்கும்.
வயசு, வேலை, சூழ்நிலைன்னு காரணங்கள் சொல்லி நாம பல விஷயங்களை தள்ளிப் போடுறோம். ஆனா நடைபயிற்சியைத் தள்ளிப் போடக்கூடாது, ஏன்னா அது நம்ம உடம்புக்கான அடிப்படை தேவை.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லாருக்கும் ஏற்ற ஒரே பயிற்சி இதுதான். தினமும் ஒரே நேரத்தில் நடக்கிற பழக்கம் வந்துடுச்சுன்னா, அது ஒரு ஒழுக்கமாகவும், வாழ்க்கை முறையாகவும் மாறும்.
நம்மை நாமே கவனிக்க ஆரம்பிக்கிற முதல் படி நடைபயிற்சி தான். அந்தப் பழக்கம் இருந்தா மருந்துகள் குறையும், மருத்துவமனைகள் தொலைவிலேயே இருக்கும்.
அதனாலே பெரிய மாற்றங்களை எதிர்பார்க்காம, சின்ன சின்ன அடிகளை முன்னோக்கி எடுத்து வைக்கலாம். இன்று எடுத்த ஒரு நடை, நாளைக்கு நம்ம வாழ்க்கையை இன்னும் ஆரோக்கியமான பாதையில் நடக்க வைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)