
மனிதர்களுக்கு உண்டாகும் புற்றுநோயில் பலவகை உண்டு. அவற்றில், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் தைராய்ட் கேன்சர் போன்றவை சாதாரணமாக பெண்களுக்கு வரக்கூடியவை.
கேன்சர் நோயின் நான்கு நிலைகளில் முதலிரண்டிற்கு எந்த வித அறிகுறியும் வெளியே தெரிவதில்லை. மூன்றாம் நிலையில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். விழிப்புணர்வுடன் அப்போதே பரிசோதனைகளை ஆரம்பித்து, கேன்சர் உறுதியானால் சிகிச்சைகளைத் தொடங்கி நோயை வென்றுவிடலாம். பெண்களைத் தாக்கும் 'தைராய்ட் கேன்சர்' வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
1. கட்டி அல்லது சருமத்தில் முடிச்சு போன்ற தோற்றம்: கழுத்தின் முன் பக்கத்தில் தெளிவாகப் பார்க்கக் கூடிய அளவிலான கட்டி ஒரு முக்கிய அறிகுறி எனலாம். இது வெளியில் தெரிய ஆரம்பித்து, பின் விரைவாக அளவில் பெரியதாகிக் கொண்டிருக்கும்.
2. குரலில் மாற்றம்: வழக்கமான குரல் கர கரப்பாகவோ அல்லது கீச்சுக் குரலாகவோ மாற்றமடையும். இந்த மாற்றம் சில வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் போது அது ஓர் எச்சரிக்கை தரும் அறிகுறியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
3. உணவை விழுங்குவதில் சிரமம்: கழுத்தில் தோன்றும் கட்டி தரும் அழுத்தம், உணவுக் குழாயில் (Esophagus) பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் உணவு உட்கொள்ளும்போது சிரமம் உண்டாகும்.
4. கழுத்து அல்லது தொண்டையில் உண்டாகும் வலி: கேன்சர் நோயின் பாதிப்பு அதிகரிக்கும்போது, சில பெண்களுக்கு கழுத்து அல்லது தொண்டையில் வலியும் அசௌகரியமும் உண்டாகக் கூடும்.
5. வீங்கிய நிணநீர் முனைகள் (Enlarged lymph nodes): நிணநீர் முனைகள் வீக்கமடைந்து தோற்றமளிப்பது, கேன்சர் பரவி வருவதை காட்டும் அறிகுறியாகும்.
6. காரணமின்றி உடல் எடை குறைதல்: மேலே கூறப்பட்ட மற்ற அறிகுறிகளுடன், உடல் எடையும் குறைந்து வந்தால், அது தைராய்ட் கேன்சரின் தாக்குதலைக் காட்டும் அறிகுறியாக இருக்கவும் வாய் ப்புண்டு.
7. சோர்வு மற்றும் பலமின்மை: மற்ற வகை புற்றுநோய்கள் காட்டும் பொதுவான அறிகுறி சோர்வு மற்றும் பலமின்மையாகும். தைராய்ட் கேன்சருக்கும் இந்த அறிகுறிகள் தோன்றுவது உண்டு.
8. மூச்சு விடுவதில் சிரமம்: கழுத்தில் தோன்றிய கட்டி பெரிதாகும் போது அது மூச்சுக் குழாயை (Trachea) அழுத்த ஆரம்பிக்கும். அப்போது மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும்.
9. தொடர் இருமல்: மருந்துகளுக்குக் கட்டுப்படாத தொடர் இருமலும் தைராய்ட் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். இந்த இருமல் குளிர் அல்லது தொற்று நோய்க் கிருமிகளால் வந்ததாக இருக்காது.
10. சில அரிய வகை அறிகுறிகள்: சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், மனக்கவலை, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றுவதும் உண்டு.
மேலே குறிப்பிட்டது போன்ற அறிகுறிகள் தென்படும்போது பெண்கள் விழிப்புணர்வு பெற்று மருத்துவரை அணுகுவது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)