
கடும் கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. கோடையின் வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பது மிகவும் முக்கியம். நமது உடல் 70 சதவீதம் நீரினால் ஆனது. நமது உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்கி அதிக குளிர்ச்சியினால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவும் நீர் முத்திரை குறித்து இப்பதிவில் காண்போம்.
நிம்மதியான தூக்கத்திற்கு நீர் முத்திரை செய்யலாம். ஏனெனில் ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, சருமத்தின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன.
நீர் முத்திரை செய்யும் முறை
கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்ச பூதங்களை சமன் செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.
தரையில் அமர்ந்தும் நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தும் இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும் மழைக் காலம், குளிர் காலங்களிலும் குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை 5 நிமிடங்கள் செய்தாலே போதும்.
நீர் முத்திரை செய்யக்கூடாதவர்கள்
ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்
* உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் செய்ய பாதிப்பு குணமாகும்.
* அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள் வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வதால் கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துப் போதல், கண் சோர்வு போன்றவை குணமாகும்.
* நீர் முத்திரையை தினமும் 5 நிமிடங்கள் செய்து வர உடலில் நீர்த்தன்மை குறைவதால் வரும் கருவளையம் காணாமல் போகும்.
* நீர் முத்திரை செய்வதால், சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளப்பாகி, பருத் தொல்லை நீங்கி, சரும நோய்கள் சரியாகும்.
* வயதானவர்களுக்கு ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.
* நீர் முத்திரை செய்வதால் வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.
* எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாக பிரச்னை நீர் முத்திரை செய்வதால் சரியாகும்.
* நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு, வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி போன்றவை மட்டுப்படும்.
*வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறைந்து மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும் . ஆகவே, இந்த எளிய நீர் முத்திரை பயிற்சியை செய்து கோடை காலத்தில் குளுமையை உணருங்கள்.