மனச்சோர்வு இருப்பதைக் கண்டறியும் வழிகள்!

Girl with depression
Girl with depression

ற்போது உள்ள அவசரகதியான வாழ்க்கை முறையில் பாதிக்கப்பட்டு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுடன் காலம் கழிப்பவர்கள் அதிகம் பெருகி வருகின்றனர். மன அழுத்தம் அதிகரிக்க பணிச் சுமை, தனிக் குடித்தனம், குழந்தைப்பேறு போன்ற பல பிரச்னைகள் அடிப்படை காரணங்களாக அமைகின்றன. உலக மக்கள் தொகையில் நான்கிலிருந்து ஐந்து சதவீதம் பேர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

மனநலப் பிரச்னைகள் என்பது மிகவும் பொதுவான உடல் நலப் பாதிப்பாக தற்போது மாறி வருகிறது. சாதாரணமாக வரும்  மன அழுத்தம் (Stress) தீவிரமாகி அது மனச்சோர்வு (Depression) என்ற நோயாக மாறும்போது நிச்சயம் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம் தேவைப்படும்.

மனச்சோர்வுக்கு வயது வித்தியாசம் கிடையாது. சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படும் நிலை உண்டு. ஆனால், ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் மனச்சோர்வால்  பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், பெண்களின் உடலில் ஏற்படும் பல்வேறு காலத்திற்கு தகுந்தாற்போன்ற ஹார்மோன் மாற்றங்கள். பூப்பெய்தும் காலம், மகப்பேறு காலம், மெனோபாஸ் காலம் போன்ற காலங்களில் பெண்கள் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அவரவரின் புறச்சூழல் மட்டுமின்றி, ஹார்மோனின் பங்களிப்பும் காரணமாகிறது.  குறிப்பாக செரட்டோனின் எனும் ரசாயன அளவு மூளையில் குறைந்தால் யாருக்கு வேண்டுமானாலும் திடீரென்று மனசோர்வு ஏற்படலாம் என்கிறது மருத்துவம்.

மனச்சோர்வை கண்டறிவது எப்படி?

மனச்சோர்வுடன் இருப்பவர்களை, ‘மருத்துவரிடம் போகலாம் வாருங்கள்’ என்று சொன்னால், ‘இல்லை, எனக்கு எந்த மனச்சோர்வும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இந்த பரிசோதனைகளை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையாளர்கள் கடைபிடிக்கும் 9 முக்கியமான விஷயங்கள் எவை தெரியுமா?
Girl with depression

நாள் முழுவதும் எதையோ இழந்தது போன்ற சோகமான மனநிலையுடன் இருப்பது, அதிக விருப்பத்துடன் செய்யும் பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் இல்லாதது, ஞாபக மறதி மற்றும் கவனச் சிதறல் இருப்பது, அதிக தூக்கம் அல்லது தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது, குறைவாக சாப்பிட்டு உடல் மெலிவது அல்லது அதிகம் கண்டவற்றை சாப்பிட்டு உடல் எடை அதிகரிப்பது, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, தற்கொலை எண்ணம் போன்றவற்றால் புலம்புவது, அன்றாடக் கடமைகளை செய்வதற்கு கூட சோம்பல் படுவது, தனிமையை நாடுவது போன்ற அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் நிச்சயமாக நல்லதொரு மருத்துவரை நாடலாம்.

அது மனச்சோர்வாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சை பெற்றால்தான் அதிலிருந்து விடுபட முடியும் என்பதால் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை தகுந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் வீட்டின் அடித்தளமாக இருப்பவர்கள். அவர்கள் சற்று சோர்ந்து போனால் வீட்டில் உள்ள மொத்த இயக்கங்களும் சோர்வடையும்.

ஆகவே, பெண்கள் தங்களுக்குள் நிகழும் இதுபோன்ற மாற்றங்களை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறைகளை கையாண்டால் பெண்களின் உடல் நலத்துடன் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com