
நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் மிக முக்கியமானவை நான்கு. அவை ஒருவரை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். டோபமைன், செரோட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்ஃபின்கள் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக அதிகரிக்க உதவும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. டோபமைன்
தினமும் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவை டோபமைன் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, மனநிலை மேம்பாட்டை உண்டாக்குகிறது. தியானப் பயிற்சியும் டோபமைனின் உணர்திறனை அதிகப்படுத்தும்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
பருப்பு வகைகள், பாதாம், முட்டை, வான்கோழி ஆகியவை டோபமைனின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
தவிர்க்க வேண்டியவை:
டோபமைன் உற்பத்தியை குறைக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். அதிகப்படியான சர்க்கரை சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் சமூக ஊடகங்களை அதிகமாக பார்த்தல் டோபமைன் செயல்பாட்டை குறைக்கும். எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். குறைவாக உபயோகிக்க வேண்டும்.
2. செரோட்டோனின்:
இந்த ஹார்மோன் ஒருவரை மன அமைதியுடனும், நிம்மதியாகவும் வைத்திருக்கும். தினமும் காலையில் 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் நிற்பது, நடப்பது போன்ற செயல்பாடுகள் உடலில் செரோட்டோனின் அளவை அதிகரிக்க உதவும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற செயல்பாடுகள் செரோட்டோனின் முன்னோடியான டிரிப்டோபனை அதிகரிக்கிறது. இது ஒருவரை மன அமைதியுடனும் சாந்தமாகவும் வைக்கிறது.
உணவு வகைகள்:
முட்டை, சீஸ், டோஃபு, வான்கோழி, சால்மன், வால்நட் மற்றும் ஆளி விதை ஆகியவை செரோட்டோனின் சமநிலையை ஆதரிக்கின்றன. தினமும் தயிர் சேர்த்துக் கொள்வது குடல், மூளை செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் செரோட்டோனின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
மன அழுத்த மேலாண்மை, உடலில் உருவாகும் கார்டிசோல் எனப்படும் ஹார்மோன் டென்ஷனையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இதன் அளவுகளைக் குறைக்க ஆழ்ந்த சுவாச முறைகள், யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும். மனதில் இருக்கும் பதட்டத்தை உருவாக்கும் எண்ணங்களை எழுத்து வடிவில் ஒரு பேப்பரில் அல்லது நோட்டில் ஜர்னலிங் செய்வது செரோட்டோனின் அளவுகளை அதிகரிக்கும்.
3. ஆக்ஸிடோஸின்:
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு உடலில் ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் எப்போதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். நாய், பூனையுடன் விளையாடுவது ஆக்ஸிடோஸின் வெளியீட்டை அதிகரிக்கும்.
கணவன், மனைவி அல்லது குழந்தைகளை அன்புடன் ஹக் செய்து கொள்வது போன்ற செயல்பாடுகள் ஆக்ஸிடோசின் அளவை அதிகரிக்கும். அர்த்தமுள்ள உரையாடல்கள், கருணைச் செயல்கள் அல்லது குழு நடவடிக்கைகள் போன்றவையும் ஒருவரது உடலில் ஆக்ஸிடோஸின் அளவை அதிகரிக்கும்.
பிறரைப் பாராட்டுவது, நன்றி உணர்வை வெளிப்படுத்துவது போன்றவை சமூகப் பிணைப்புகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒருவரை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது.
4. எண்டார்ஃபின்:
எண்டார்ஃபின் என்கிற ஹார்மோன் ஒருவருக்கு வலி நிவாரணம் அளிக்கும். பரவசமாக உணர வைக்கும். அதிக தீவிரமான உடற்பயிற்சிகளான ஓட்டம், நடனம் போன்றவை எண்டார்ஃபின்களின் வெளியீட்டைத் தூண்டும். அதேபோல கடினமான தீவிரமான உடற்பயிற்சிகளும் உடலில் எண்டார்ஃபின்களை வெளியிடும்.
எண்டார்ஃபின்களைத் தூண்ட அதிகமாக நகைச்சுவை காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை அல்லது வீடியோக்களை பார்க்கலாம். வாய்விட்டு சிரிக்கும் போது எண்டார்ஃபினின் அளவு அதிகரிக்கும்.
டார்க் சாக்லேட் உண்பதும் ஒருவரை மகிழ்ச்சியாக வைக்கிறது. அதேபோல மிளகாயில் உள்ள கேப்சைசின் எண்டார்ஃபின் வெளியீட்டை அதிகரிக்கிறது.
படைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், இசை, கலை போன்றவை மன அழுத்தத்தை குறைத்து எண்டார்ஃபின்களை அதிகரிக்கிறது. மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை மன அழுத்தத்தை அதிகரித்து இந்த நான்கு வகையான ஹார்மோன்கள் சுரப்பைக் குறைக்கின்றன. எனவே, இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.