ரத்தசோகை என்பது உடலில் போதுமான அளவு சிவப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் இல்லாததால் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். ஹீமோகுளோபின் என்பது சிவப்பு ரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதம். இது ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்ல உதவுகிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடல் சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இதில் இரும்பு பற்றாக்குறை ரத்த சோகை என்பது ரத்த சோகையின் ஒரு பொதுவான வகை. இது போதுமான அளவு இரும்பு உட்கொள்ளாததால் ஏற்படுகிறது. இரும்புச்சத்து உடலின் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியம். ரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க பல வழிகள் இருந்தாலும், இயற்கையாகவே இதை சரி செய்ய முடியும். அதற்கான வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ரத்த சோகையை சரி செய்யும் வழிகள்:
தினசரி போதுமான அளவு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ரத்த சேகையை சரி செய்ய உதவும். சிவப்பு இறைச்சி, கோழி, மீன், பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சை இலை காய்கறிகள், உலர் பழங்கள் போன்றவை இரும்புச் சத்து நிறைந்த உணவுகளாகும்.
வைட்டமின் சி, உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே, வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், தக்காளி, மிளகு, ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடலில் போதிய அளவு திரவம் இல்லை என்றால் அது ரத்த சோகையின் அறிகுறிகளை மோசமாக்கலாம். எனவே, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இத்துடன் வழக்கமான உடற்பயிற்சி, உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க உதவும்.
தினசரி போதுமான அளவு தூங்க வேண்டும். இது நீங்கள் புத்துணர்ச்சியாக இருக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
மன அழுத்தத்தில் இருப்பது ரத்த சோகையின் அறிகுறிகளை மோசமாக்கக்கூடும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம், சுவாசப் பயிற்சிகள் போன்ற நுட்பங்களை பயிற்சி செய்வது முக்கியம்.
இந்த விஷயங்களை நீங்கள் முறையாக கடைப்பிடித்து வந்தாலே, ரத்த சோகையிலிருந்து விடுபடலாம். மேற்கூறிய விஷயங்களை முயற்சித்துப் பார்த்தும் ரத்தசோகை பிரச்சனை குறையவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.