நம் உடலில் சர்க்கரை (Glucose) முக்கிய ஆற்றல் மூலமாகும். உணவுகள் செரிமானம் அடையும்போது அவை சக்கரையாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. பின்னர் இன்சுலின் என்ற ஹார்மோன் சர்க்கரையை செல்களுக்கு செல்ல உதவுகிறது. அங்கு அது ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யவோ அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை திறம்பட பயன்படுத்துவோம் முடியாது.
இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கண், சிறுநீரகம், நரம்பு மற்றும் இதயம் போன்ற உடலின் பல்வேறு பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தப் பதிவில் உயர் ரத்த சர்க்கரை அளவின் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
உயர் ரத்த சர்க்கரையின் அறிகுறிகள்:
உயர் ரத்த சர்க்கரை அளவு சிறுநிரகங்களை அதிகமாக வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிறது. இது நீரிழிப்புக்கு வழி வகுப்பதால், அதிகப்படியான தாகம் இருக்கும். நீரிழிப்பை ஈடு செய்ய உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்வதால், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
உங்கள் செல்கள் சர்க்கரையை பயன்படுத்தும்போது அதிக பசியை உணர்வீர்கள். அதே நேரம் உங்கள் உடல் சர்க்கரையை ஆற்றலுக்காக பயன்படுத்த முடியாவிட்டால் நீங்கள் சோர்வாக உணரலாம்.
உயர் ரத்த சக்கரை அளவு கண் விழித்திரையின் லென்ஸ்க்களை சேதப்படுத்தும் இது மங்களான பார்வைக்கு வழிவகுக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது காயங்கள் மற்றும் தொற்றுகளை மெதுவாக ஆற்றும். மேலும், தோலில் அரிப்பு, வறட்சி மற்றும் தடிப்புகள் போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
இது, நரம்புகளை சேதப்படுத்தி கை, கால்கள் மரத்துப்போதல் மற்றும் வலிகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
அடிக்கடி பூஞ்சை தொற்றை நீங்கள் எதிர்கொண்டால் உங்கள் உடலில் அதிக ரத்த சர்க்கரை அளவு இருக்கலாம்.
உங்களுக்கு இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக உங்கள் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதில் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பார்வை இழப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருப்பதால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.