இப்படியெல்லாம் செய்யலாமா? செய்தால், அனுபவித்துதானே ஆகணும்!

Eating habits
Eating habits
Published on

- தா. சரவணன் 

உணவே மருந்து என்ற நம் முன்னோர் வாக்கை நாம் மறந்துவிட்ட நிலையில், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு நோய்களைச் சுமந்து கொண்டு திரிகிறோம். இதற்கு முக்கியக் காரணம், நம் உணவுப் பழக்கத்தை நாம் மாற்றிக் கொண்டு, உடல் உழைப்பை மறந்தும் போனதுதான்.

காலையில் எழுந்ததும் கூழ் அல்லது, பழைய சோற்றில் தயிர் ஊற்றி, அதனுடன் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் கடித்துக்கொண்டு சாப்பிட்டது அந்தக் காலம். ஆனால், இப்போது, நம் நாட்டைச் சுற்றி உள்ள நாடுகளில் அருந்தும் அவர்களின் சீதோஷ்ண நிலைக்கேற்ற உணவுப் பொருட்களை நாம் சாப்பிட்டு வருகிறோம். இப்போதைய சூழலுக்கு, கூழ், பழையது சாப்பிட முடியாது என்றால், குறைந்தபட்சம் இட்லி மட்டுமாவது காலை உணவாக இருப்பது நல்லது என்கின்றனர் உணவு வல்லுனர்கள். ஆனால், நாமோ, நம் உடலுக்கு எந்தெந்த உணவுகள் கேடு தரும் என தேடி, தேடிச் சென்று சாப்பிடுகிறோம். அதனால், நம் உடல் நோய்களின் பிறப்பிடமாகிப் போகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு காய்ச்சல் வந்தால், அருகே உள்ள டாக்டர் மாமாவிடம் நம்முடைய அம்மாவோ, அப்பாவோ அழைத்துச் செல்வார்கள். அங்குள்ள நர்சு அக்கா, நம்மைப் பார்த்ததும், ‛வாடா தம்பி’ என உரிமையோடு அழைத்து, அக்குளில் காய்ச்சல் கண்டறியும் கருவியை வைத்து ஜூர அளவைப் பார்ப்பார். அதற்கே நம் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும். அதன் பின்னர் டாக்டரிடம் சென்று, இடுப்புக்கு கீழே  அவர் ஊசி போடும்போது அந்த தெருவே கதறிப் போகும். அதன் பின்னர் 3 நாட்களுக்கு மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம். வீட்டில் தயாராக இருக்கும் காப்பியில் பன்னை தொட்டு சாப்பிட்டுவிட்டு, விளையாட கிளம்பி விடுவோம். இதுதான்
40 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கான உடல் நிலை சரியில்லாமல் போன சூழலும் சமாளிப்பும். ஆனால், இப்போது, காய்ச்சல் வந்ததும், ஆஸ்பத்திரி களேபரங்கள் என்னென்ன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் படியுங்கள்:
சின்னச் சின்ன வைத்தியக் குறிப்புகள் !
Eating habits

இவை அனைத்துக்கும் முழு முதல் காரணம், நாம் பாரம்பரிய உணவை மறந்ததும், உடல் உழைப்பை மறந்ததும் ஆகும். நம்முடைய அடிப்படை உணவான அரிசி கூட, 90 நாட்களில் விளைவித்து வீடு வந்து சேர்கிறது. அப்படியிருக்க காய்கறி, பழங்களின் விளைச்சல் குறித்து சொல்லவே வேண்டியதில்லை. இதனால் பாதிக்கப்படுவது நாமும் நம் சந்ததியினரும்தான். இதனால் நம்மால் முடிந்தளவு நம் மண் சார்ந்த தினை, சாமை, கேழ்வரகு, குதிரை வாலி, கருப்பு கவுனி போன்றவைகளை வாரத்துக்கு 3 நேரமாவது எடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இவற்றின் விலை சற்று அதிகம்.

நாம் மறந்துபோன பல நல்லவற்றில் உடல் உழைப்பும் ஒன்றாகும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் நாம் எவ்வளவு தூரம் என்றாலும் நடந்து சென்றோம். அல்லது சைக்கிளில் சென்றோம். ஆனால் பக்கத்து தெருவுக்குச் செல்ல பைக் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதனால் உடல் உழைப்பு என்பதை நாம் சுத்தமாக மறந்து போனோம்.

 ஒரு ராணுவ வீரர் கூறியது, பணியில் இருக்கும் ராணுவ வீரர்களில் 99 சதவீதம் பேர்களுக்கு தொப்பை இருக்காது. அவர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் உணவு அதிகம் உண்டு விட்டார்கள் என்றால், அந்தக் கலோரியை எரிப்பதற்கான அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்துவிடுவார்கள். ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றால், நடனமாடியாவது அன்றைய தினம் தேவையில்லாமல் உடலில் சேர்ந்த கலோரியை எரித்துவிடுவார்கள் என்றார்.

அதனால் இனியாவது பாரம்பரிய உணவைச் சாப்பிட்டு, தேவையான உடல் உழைப்பில் ஈடுபட்டு, நம் உடல் நலனை பேணிக் காப்போம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com