
இந்த மழைக் காலங்களில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்!” என்பார்கள். அதைப்போல உடம்பு நன்றாக இருந்தால் தான் உழைக்க முடியும். இந்த மழை நேரத்தில் தண்ணீரை நன்றாக சூடு படுத்தி குடித்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் நாம் குளிர்ந்த தண்ணீரை குடிக்கும் போது அதில் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் அப்படியே நம் உடலுக்குள் சென்று விடும். அது நம் உடலில் பல்கி பெருகி சளி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.
ஆகையால் நாம் சுடுதண்ணீரை நன்றாகக் காய்ச்சி கொதிக்க வைத்து குடித்தால் அந்தத் தண்ணீரில் உள்ள நுண்கிருமிகள் அந்த வெப்பத்தால் கொல்லப்பட்டு இறந்து விடும். இவ்வாறாக கொதிக்க வைத்து வடிகட்டிய சுடுதண்ணீரை பருகுவதால் நம் உடல் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும். சுடு தண்ணீர் நாம் பருகுவதால் நம் உடலுக்குள் எந்த நோய் கிருமிகளும் நுழையாது என்பது முக்கியமான ஒன்றாகும். சிறியவர் முதல் வயதான பெரியோர்கள் வரை எல்லோரும் வீட்டில் இந்த மழைக் காலங்களில் சுடுதண்ணீரைக் குடித்து வந்தால் உடலுக்குப் பல்விதமான நன்மைகள் கிடைக்கும்.
நாம் அன்றாடம் காலை, மாலை இருவேளைகளிலும் குடிக்கக் கூடிய டீ, காபி போன்ற பானங்களுக்குப் பதிலாக சுக்கு மல்லிக் காப்பியைக் குடித்தால் சாலச் சிறந்ததாக இருக்கும். இந்த சுக்கு மல்லி காப்பியில் நாம் சேர்க்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் உடலுக்குத் தேவையான மருந்துப் பொருளாகும். “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்பது பழமொழியாகும். இஞ்சி தான் காய்ந்த பிறகு சுக்காக மாறுகிறது.
இந்த சுக்கு மல்லிக் காப்பியில் சுக்கு, மல்லி, இலவங்கம், ஏலைக்காய், துளசி, பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதன் மூலம் நம் உடலானது புத்துணர்ச்சி பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குத் தருகிறது. இந்த மழைக்காலங்களில் பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா ஒட்டுண்ணிகள் போன்ற எத்தனையோ வகையான நுண்கிருமிகள் குழந்தைகளையும், வயதான பெரியோர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களையும் எளிதில் தொற்றிவிடும். ஆகையால் இந்த மாதிரியான சுக்கு மல்லி காபி குடிப்பதன் மூலமும் நம் உடலை ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எல்லோர் வீட்டிலும் எளிமையாக முருங்கைக்கீரை கிடைத்துவிடும். இந்த முருங்கைக் கீரை மிகவும் விலை மலிவானதாகும். இதனை வாங்கி நீங்கள் சூப் வைத்துக் குடித்தால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இது உடலுக்கு வலிமையையும் தருகிறது. இப்படிப்பட்ட முருங்கைக் கீரையை சூப் வைத்துக் குடித்தால் நமது உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
வாரத்திற்கு ஒரு முறை நிலவேம்பு கசாயம் வைத்துக் குடித்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் கிடைக்கும். இந்த நிலவேம்பானது கிராமங்களில் அதிகமாகக் கிடைக்கும். அப்படி கிடைக்காத பட்சத்தில் நீங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் “நிலவேம்பு பொடி” என்று கேட்டு வாங்கி அதனை சுடுதண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை பெற முடிகிறது.
இப்படிச் செய்தால் மட்டுமே மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்களான டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்கன்குனியா, வைரஸ் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், போன்ற பல நோய்த் தொற்றுகளில் இருந்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
“வெள்ளம் வரும் முன் அணை போடு” என்பது பழமொழி. அதைப்போல நோய் வருவதற்கு முன்பே நாம் சுடுதண்ணீர், சுக்கு மல்லிக் காப்பி, முருங்கைக்கீரை சூப், நிலவேம்புக் கசாயம் ஆகியவற்றால் நம் உடலுக்கு அணைபோடுவோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)