குறட்டை என்பது நாம் நினைப்பது போல் காரணம் இன்றி வருவதில்லை. இரவில் நாம் ஓய்வு எடுக்கும்போது மூச்சுக் குழாயில் உள்ள அதிகப்படியான திசுக்கள் சுவாசத்தை தடுக்கின்றன. அப்பொழுதுதான் குறட்டை ஏற்படுகிறது. இதனால் இதயநோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது. குறட்டையின் ஒலி அதிகமானால் நோயின் சிக்கல் அதிகமாகிறது என்றே பொருள். ஒரு நாளில் 4 மணி நேரத்திற்கு மேல் டிவி பார்ப்பவர்களுக்கு தூக்கத்தில் குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதற்கு 78 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்கிறது ஆய்வு.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். தடையற்ற உறக்கம் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். நம்மில் பலா் தூக்கத்தின்போது குறட்டை விடுவதை பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்வதில்லை. அது ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறி என்று தவறாக நினைப்போரும் உண்டு. உண்மையில், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்று. உடலில் அகச்சுரப்பிகள் முறையாக செயல்படுவதற்கும், உடல் உறுப்புகள் முறையாக இயங்குவதற்கும் ஆக்சிஜன் இன்றியமையாதது. சுவாசப் பாதையில் சதை வளா்ச்சி, தசைகள் தளா்வு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தூக்கத்தில் சரியாக சுவாசிக்க முடியாது. அவ்வாறு சுவாசிக்க இயலாமல் உடலில் ஆக்சிஜன் குறையும்போது அகச்சுரப்பிகளில் பாதிப்பு ஏற்பட்டு சா்க்கரை நோய், தைராய்டு பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு வருவதற்கான ஆபத்துகளை உருவாக்கும் என்கிறார்கள்.
உலகில் 30 சதவீத மக்களுக்கு குறட்டை என்பது ஒரு பிரச்னையாக உள்ளது. ஆனால், அது நோய் அல்ல., பிரபலங்களான அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி போன்றவர்கள் எல்லாம் குறட்டையர்கள்தான். இந்த குறட்டை அவஸ்தையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு உதவும் 10 டிப்ஸ்களை இனி பார்ப்போம்.
குறட்டையை ஒழிக்க நமது எடையைக் குறைக்க வேண்டும். காரணம் உடல் எவ்வளவுக்கெவ்வளவு பருமனாக இருக்கிறதோஅவ்வளவுக்களவு குறட்டை ஒலி அதிகமாக இருக்கும். கழுத்து பகுதியில் சேரும் கொழுப்பு திசுக்கள் காற்று வழியை அடைப்பதால் குறட்டை ஏற்படுகிறது. எனவே, எடையை குறையுங்கள். எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்த்து ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். புகைப்பிடிப்பதால் மூச்சுக் குழாயின் காற்று வழிகள் வீக்கமடைகிறது. இது சுவாச முறையில் சிக்கலை ஏற்படுத்தி குறட்டையை ஏற்படுத்துகிறது.
ஆல்கஹால் மற்றும் தூக்க மாத்திரைகளை போடுவதை தவிருங்கள். இந்தப் பழக்கம் நரம்பு மண்டல கட்டுப்பாட்டை பாதிக்கிறது. இது தொண்டையில் உள்ள சதை பகுதியை இடையூறு செய்து குறட்டையை ஏற்படுத்துகிறது.
உங்கள் தூங்கும் முறையை மாற்றுங்கள். மல்லாந்து படுப்பதை தவிர்த்து, ஒருகளித்து படுங்கள். இதனால் குறட்டையை தவிர்க்கலாம். மேலும், தலைப்பகுதி கொஞ்சம் உயரமாக இருக்கும்படி தலையணை வைத்து படுத்தால் குறட்டையை தவிர்க்கலாம்
படுக்கைக்குச் செல்லும் முன், ‘ஹெவி’யாக சாப்பிடுவதை தவிருங்கள். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு படுத்தால் வயிற்றில் இருக்கும் உதரவிதானம் மேலெழுந்து மூச்சு குழாய் வழியை தடைப்படுத்தி குறட்டையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். எனவே, பால் உணவுகள், கேக், குக்கீஸ் மற்றும் பாஸ்ட் புட்கள் போன்ற ஹெவி உணவுகளை தவிருங்கள். படுக்கைக்குச் செல்லும் முன் கொஞ்சம் தேன் சாப்பிட்டு விட்டு படுத்தால் நல்லது.
கருவுற்ற பெண்களுக்கு குறட்டை பிரச்னை ஏற்படும். காரணம் இரத்த ஓட்டத்தில் ஏற்றத் தாழ்வுகள், ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்வதில் குறைகளை ஏற்படுத்துகிறது அதனால் குறட்டை ஏற்படும். அதேவேளையில் பெண்களுக்கு ‘மெனோபாஸ்’ காலத்தில் ஹார்மோன் பிரச்னை ஏற்படும். இதனாலும் குறட்டை ஏற்படும். இதை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று நிவாரணம் பெறலாம்.
பாட்டு பாடுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். அதனால் குறட்டையை தவிர்க்கலாம் என்கிறார்கள் இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள். பாட்டு பாடுவதால் தொண்டையிலுள்ள சதைப்பகுதி நன்கு மசாஜ் செய்யப்படுகிறது. இதனால் நிம்மதியாக தூங்க முடிகிறது என்கிறார்கள்.
உங்களுக்கு அலர்ஜி உபாதைகள் இருந்தால் அதை சரி செய்யுங்கள். அலர்ஜியால், சில வகை சளி தொந்தரவுகளால் குறட்டை ஏற்படலாம் என்கிறார்கள். அதனால் தூசி, வீட்டு செல்லப்பிராணிகளின் ரோமங்கள், சிகரெட் புகை போன்ற அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்களை விட்டு விலகி இருங்கள்.
உங்கள் மூச்சை எளிதாக்குங்கள். உங்கள் சுவாசம் எளிதாக, இயல்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் குறட்டை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறட்டை தொந்தரவு உள்ளவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் ஆவி பிடித்து விட்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும். ஆவி பிடிப்பதால் மூக்கில் சுவாசத் தடை ஏற்படுவதை தவிர்க்கலாம், இல்லையென்றால் வீட்டில், ‘எக்ஸாஸ்ட்’ பேன் இருக்கும் அறையில் தூங்குங்கள்.
மேற்கூறியவற்றால் குறட்டையை தவிர்க்க முடியாத நிலையில், டாக்டர்கள் ஆலோசனை பெற்று வாய்பூட்டு மெஷினை வாங்கிப் பயன்படுத்தி இரவில் நிம்மதியாகத் தூங்குங்கள்.