Smoke food
Smoke food

திரவ நைட்ரஜன் உணவுகளை சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

திரவ நைட்ரஜன் உணவுகளில் ஒன்றான ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, 2017ம் ஆண்டு ஒரு 30 வயது ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திரவ நைட்ரஜன் கலந்த பானத்தை பருகியதால், வயிறு வீங்கி, அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சற்று நேரத்தில் மூச்சுத் திணறலும் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட இவரின் அடிவயிற்றில் துளை உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இவர் இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்கள் ஆனது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹரியானா அரசு நைட்ரஜன் கலந்த உணவுகளையும் பானங்களையும் தடை செய்தது.

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டிருக்கிறான். சாப்பிட்ட சில நேரங்களிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு வலியால் துடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை, உணவுகள் மற்றும் பானங்களில் நேரடியாக திரவ நைட்ரஜனை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.

இதனால், திரவ நைட்ரஜன் என்றால் என்ன?, அதை ஏன் உணவுகளில் பயன்படுத்துகிறார்கள்? அதனால் என்ன பாதிப்புகள் உண்டாகும்? போன்றவற்றை பற்றி ஆராய்ந்துப் பார்த்தால்,

திரவ நைட்ரஜன் என்பது -196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்டதாகும். இந்த மிகக்குறைவான வெப்பநிலையால்தான் உணவுகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க இதனைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் இந்த மிகக்குறைவான வெப்பநிலையை உடலில் எடுத்துக்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். சிறிதளவு கவனம் இல்லாமல் எடுத்துக்கொண்டால் கூட இது உடலின் செல்களை உறையச் செய்துவிடும். அப்போது இந்த திரவ நைட்ரஜன் ஆவியாகக்கூடிய திரவமாக மாறும். இது உடலின் ஒரு இடத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றி, மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.

உணவைப் பதப்படுத்த திரவ நைட்ரஜன் உதவுகிறது என்றாலும், அந்த உணவை உடனடியாக சமைக்கவே கூடாது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் உயர் வெப்பத்தில் சமைக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆகையால், திரவ நைட்ரஜனில் வைத்த உணவை ஒருப்போதும் நேரடியாக சமைக்கவே கூடாது.

இதையும் படியுங்கள்:
தொல்லை தரும் கொசுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Smoke food

வெளிநாடுகளில் திரவ நைட்ரஜன் உணவுகளின் விழிப்புணர்வுகள் நிறையவே கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அந்த விழிப்புணர்வுகள் மிகக்குறைவு. உடலில் இருந்து உயிர் போகும்போது எப்படி செல்கள் உறையுமோ, அதேபோல் திரவ நைட்ரஜன் உணவுகளை எடுத்துக்கொண்டால், உயிருடன் இருக்கும்போதே செல்கள் உறைகின்றன. இது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, குடல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. சில சமயம் வயிற்றில் துளை உருவாகி, உயிரையே கொல்லும்.

ஆகையால், இந்த உணவை எடுத்துக்கொள்ளும்போது விதிமுறைகளை அறிந்து, விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே, இது போன்ற கேடு விளைவிக்கும் உணவுகளிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com