வெங்காயம் என்பது உலகில் உள்ள எல்லா பகுதிகளிலும் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான காய்கறி. இது அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. இந்தப் பதிவில் தினசரி வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சில முக்கியமான மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்.
தினசரி வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள்:
வெங்காயத்தில் உள்ள Quercetin என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வெங்காயத்தில் உள்ள சல்பர் சேர்மங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.
வெங்காயத்தில் உள்ள சில சேர்மங்கள் சில வகையான புற்று நோய்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் ஆர்த்ரைட்டிஸ் போன்ற அழற்சி நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
வெங்காயத்தில் உள்ள புரோபயோடிக்ஸ் செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவி செரிமானத்தை சீராக்குகிறது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வெங்காயத்தின் குறைந்த கலோரி உள்ளடக்கம், உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, சரும ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இது ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
வெங்காய சாற்றினை தொடர்ச்சியாக தலையில் தடவி வந்தால், அதில் உள்ள சல்பர், முடி வளர்ச்சியை ஊக்குவித்து பொடுகைக் குறைக்க உதவும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
வெங்காயத்தை தொடர்ச்சியாக சாப்பிடுவது சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக வாயு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும்.
ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் வெங்காயம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், இது ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவில் வெங்காயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் எந்த பிரச்சனையும் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு 1-2 வெங்காயங்களை சாப்பிடுவது பாதுகாப்பானது. எனவே உங்களுக்கு பிடித்தபடி தினசரி வெங்காயத்தை சாப்பிட்டு உங்களது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருங்கள்.