
CRP (C-reactive protein) என்பது நம் உடலில் எங்காவது ஒரு சிறிய வீக்கம் ஏற்படும்போது, நம் கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு வகைப் புரோட்டீன். ஹை சென்சிடிவிட்டி சிஆர்பி (hs-CRP), இதய நோயின் ஆரம்ப அறிகுறியைக் காட்டுவது போன்ற சிறு வீக்கத்தைக் கூட துல்லியமாகக் கண்டுபிடித்துக் காட்டிவிடும். CRP அளவைக் குறைத்து இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்க, நம் டயட், உடற்பயிற்சி, உறக்கம், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் போன்றவற்றை சரியான முறையில் கடைபிடித்து வருவது அவசியம். CRP பற்றி சற்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
உடலுக்குள் தொற்று நோய்க் கிருமிகளின் ஊடுருவல், சிறு காயம் மற்றும் சத்தமின்றிப் பரவிக்கொண்டிருக்கும் ஏதாவதொரு நாள்ப்பட்ட வியாதி என எந்த வகையான கோளாறு ஏற்பட்டாலும், நம் இரத்தத்தில் சிஆர்பி அளவு உயரும். CRP, உடலில் எங்கே, என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கூறாவிட்டாலும், 'ஏதோ ஒரு தவறு நேர்ந்துள்ளது' என்று ஓர் எச்சரிக்கை மணியடிக்கும்.
நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு சம நிலையில் இருந்தாலும், ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதத்தை வரவழைக்கக் கூடிய கடுகிலும் சிறிய அளவு வீக்கத்தைக் கூட hs-CRP டெஸ்ட் மூலம் கண்டு பிடித்து விடலாம். hs-CRP டெஸ்ட் கூறும் விளக்கமான ரிசல்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1.0 mg/L அல்லது அதற்கும் குறைவான அளவு - இதயநோய் வரும் அபாயம் மிகக் குறைவு.
1.0 to 3.0 mg/L - மீடியம் ரிஸ்க். வாழ்வியல் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம்.
3.0 mg/L அல்லது அதற்கும் மேலான அளவு - ஹை ரிஸ்க். சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் நீங்கள் உள்ளீர்கள் என்பதைக் காட்டும் அறிகுறி.
அதிகளவு CRP உள்ளவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மடங்கு ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதம் வரும் அபாயம் அதிகம்.
நாள்பட்ட வீக்கம் என்பது பழுதுபட்ட இரத்த நாளங்கள், பிளேக்குகளின் நிலையற்ற தன்மை, மற்றும் ஹார்ட் அட்டாக், PAD அல்லது பக்கவாதம் வரும் அபாயம் போன்றவைகளுக்கு சமம் என்கின்றனர் இதய நோய் நிபுணர்கள்.
இந்த டெஸ்ட் முடிவுகள் ஒரு பொதுவான வழிகாட்டுதல் மட்டுமே. உங்கள் ஒட்டுமொத்த உடல்நலன், குடும்ப வரலாறு மற்றும் பிற ஆபத்துக் காரணிகளைப் பொறுத்து ஒரு மருத்துவர் இந்த முடிவுகளை விரிவாகப் புரிந்துகொண்டு ஆலோசனை வழங்குவார். உதாரணமாக, உடலில் வேறு ஏதேனும் நோய்த்தொற்று (infection) அல்லது வீக்கம் இருந்தால், hs-CRP அளவு அதிகமாக இருக்கக்கூடும். எனவே, டெஸ்ட் முடிவுகளின் முழுமையான விளக்கத்திற்கு ஒரு மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.
CRP மற்றும் வீக்கங்கள் குறைய, சால்மன், சர்டைன் போன்ற மீன்கள், கவர்ச்சிகரமான நிறமுடைய காய்கறிகள், பழங்கள், ஓட்ஸ், பிரவுன் ரைஸ் போன்ற முழு தானிய வகைகள் தாவர வகைக் கொட்டைகள், விதைகள் மற்றும் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் போன்ற உணவுகளை உட்கொள்வது அவசியம்.
பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட், ரெட் மீட், சர்க்கரை அதிகம் சேர்த்த பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ், சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நலம்.
நல்ல தூக்கம், குறைவான ஸ்கிரீன் டைம், மெடிடேஷன், நடைப்பயிற்சி, புத்தகம் படிப்பது போன்ற இதயத்திற்கு இதம் தரும் வாழ்வியல் முறைகள் போன்றவை உங்கள் வாழ்நாள் நீடிக்க சிறந்த முறையில் உதவி புரியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)