முக மறதி நோய்… 55 வயதைக் கடந்தவர்கள் ஜாக்கிரதை! 

Face Blindness
Face Blindness
Published on

நாம் ஒவ்வொரு நாளும் பல முகங்களை சந்திக்கிறோம். நண்பர்கள், குடும்பத்தினர், உடன் வேலை செய்பவர்கள் என அனைவரையும் அவர்களது முகங்களால் அடையாளம் கண்டு கொள்கிறோம். ஆனால் சிலருக்கு இந்த எளிய செயல் ஒரு பெரிய சவாலாக இருக்கும். அவர்களால் முகங்களை அடையாளம் காண முடியாது. இதுவே ‘முக மறதி (Face Blindness)’ அல்லது ‘Prosopagnosia’ எனப்படும் நோய். இந்த நோயைப் பற்றி முதியவர்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவர்களுக்குதான் இது அதிகம் ஏற்படுகிறதாம்.  

Face Blindness என்றால் என்ன? 

முகமறதி என்பது ஒரு நரம்பியல் நிலை. இதில் பாதிக்கப்பட்டவர்களால் பிறரது முகங்களை அடையாளம் காண முடியாது. அவர்களால் முகங்களின் அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ளவோ, முகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கண்டறியவோ முடியாது. இதனால் அவர்கள் தங்களது தினசரி வாழ்வில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். 

முகமறதி நோயில் மொத்தம் இரண்டு வகை உள்ளது. சிலருக்கு பிறவிலேயே இருக்கும் அல்லது பின்னாளில் காயம் காரணமாகவோ, முதுமை பருவத்திலோ சிலருக்கு ஏற்படும். பிறவியிலேயே ஏற்படும் முகம் மறதி, மரபணுக்களால் ஏற்படும் நிலை. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சரியாக செயல்படாது. பின்னாளில் ஏற்படும் முக மறதி மூளை காயம், பக்கவாதம், அல்சைமர் நோய் போன்ற நோய்கள் காரணமாக ஏற்படக்கூடும். இது 55 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. 

முக மறதியின் அறிகுறிகள்: 

  • முகங்களை அடையாளம் காண முடியாமல் போதல். 

  • நண்பர்கள் குடும்பத்தினரை அடையாளம் காண முடியாமை.

  • முகங்களின் அம்சங்கள் நினைவில் இருக்காது. 

  • முகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கண்டறிய முடியாது. 

  • முகங்களைப் பற்றி பேசும்போது சிரமப்படுதல். 

  • சமூக சூழல்களில் இந்த பாதிப்பால் அசௌகரியமாக உணருதல். 

முக மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது தினசரி வாழ்வில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். முகங்களை அடையாளம் காண முடியாததால் அவர்களால் மற்றவர்களுடன் சிறந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மனச்சோர்வுக்கு ஆளாக நேரிடும். 

வேலை செய்யும் இடத்தில் தனது சக பணியாளர்களை அடையாளம் காண முடியாததால், அவர்களுக்கு வேலை செய்வது கடினமாக இருக்கும். தங்களின் குடும்பத்தினர், நண்பர்களையே இவர்களுக்கு அடையாளம் தெரியாது என்பதால் உறவு பாதிக்கப்படும். 

இதையும் படியுங்கள்:
கீமோதெரபி சிகிச்சை பெறும்போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க ப்ளீஸ்! 
Face Blindness

இந்த நோய்க்கு இதுவரை சரியான சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. ஆனால் சில யுத்திகள் மூலம் அதன் தாக்கங்களைக் குறைக்கலாம். முகங்களை அடையாளம் காணும் பயிற்சிகள் மூலம் மூளையை தூண்டி விட முயற்சிக்கலாம். மற்றவர்களுடன் அதிக நேரம் தொடர்பில் இருப்பது முக மறதியின் தாக்கங்களை குறைக்க உதவும். மனோதத்துவ முறைகளைப் பின்பற்றி மனச்சோர்வு மற்றும் தனிமை உணர்விலிருந்து வெளிவரலாம். இவர்களுக்காகவே சந்தையில் சில சாதனங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி முகங்களை அடையாளம் காண முடியும். 

மேற்கூறிய அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை குறித்து ஆலோசிப்பது நல்லது. முக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உடன் இருப்பவர்கள் உதவ வேண்டும். அவர்களையும் மற்றவர்களைப் போலவே மதித்து நடக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com