
40, 50 வயதுக்குப் பிறகு மனிதர்களின் எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி, கால் வலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. Horse Stance என்ற எளிய பயிற்சியை தினமும் செய்து வருவதன் மூலம் மூட்டு ஆரோக்கியம், உடல் வலிமை, சமநிலை, தோரணை போன்றவற்றை மேம்படுத்தலாம். இதற்கு ஜிம்மோ, உபகரணங்களோ தேவையில்லை. தினமும் இரண்டு நிமிடங்கள் இந்த உடற்பயிற்சியை மிக எளிதாக வீட்டு ஹால், சமையலறை அல்லது படுக்கையறையில் கூட செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
Horse Stance என்றால் என்ன?
ஹார்ஸ் ஸ்டான்ஸ் (Horse Stance) என்பது குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வது போன்ற உட்காருகின்ற நிலை. இது தற்காப்புக் கலைகள், யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான போஸ் ஆகும். இது கால்கள், உடலின் மையப் பகுதி மற்றும் இடுப்பில் உள்ள பல தசைகளை ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்கிறது.
இந்தப் பயிற்சியை எப்படி செய்வது?
தரையில் இரண்டு கால்களையும் ஊன்றி நேராக நிற்கவும். இரண்டு கால்களையும் பக்கவாட்டில் ஒரு பெரிய அடி எடுத்து வைக்கவும். தோள்பட்டை பகுதியை விட இரண்டு மடங்கு அகலமாக இருக்கும்படி கால்களை வைத்துக் கொள்ளவும். கால் விரல்களை வெளிப்புறமாக நீட்டி வைத்திருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஒரு ஸ்டூலில் அமர்ந்திருப்பது போல மெதுவாக முழங்கால்களை வளைத்து இடுப்பை தாழ்த்த வேண்டும். தொடைகள் இரண்டும் தட்டையாக வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
முதுகுப் பகுதி நேராகவும் மார்பை உயர்த்தியும் வைக்க வேண்டும். ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வாய் வழியாக வெளிவிட்டு 30 வினாடிகள் வரை அதே நிலையில் இருக்க வேண்டும். பின்பு இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். மெதுவாக எழுந்து நின்று கால்களை தளர்த்திக் கொள்ளவும் ஆரம்பகாலத்தில் மெதுவாக செய்ய வேண்டிய பயிற்சி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Horse Stance 50 வயதுக்காரர்களுக்கு ஏன் மிகவும் உகந்தது?
மக்களுக்கு 50 வயதாகும் போது கால் மற்றும் மூட்டுகளில் வலிமை குறைந்து போகிறது. நடப்பதற்கும், நிற்பதற்கும், படிகள் ஏறுவதற்கும் வலுவான கால்கள் அவசியம். 50 வயதிற்கு மேல் கடினமான வேகமான உடற்பயிற்சிகள் மூட்டுகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் Horse Stance மென்மையான பயிற்சியாகும். இது தசையை உறுதியாக்கும். எலும்பை வலுவாக்கும்.
தினமும் இந்தப் பயிற்சியை செய்து வரும் போது தொடைகள், பிட்டம், கன்று தசைகள், தொடை எலும்புகள், பக்கவாட்டுத் தசைகள், வயிற்றின் பின்புறம் உள்ள மைய தசைகள் வலிமை பெறுகின்றன. இது வயதாகும்போது இழந்த வலிமையை மீட்க உதவுகிறது. அன்றாட நடவடிக்கைகளை எளிதாகவும் பாதுகாப்பாக மாற்றுகிறது.
வயதாகும் போது உடலின் சமநிலையைப் பாதுகாக்க இந்த பயிற்சி உதவுகிறது. மென்மையான தரை, அல்லது கரடுமுரடான தரையில் கூட நடந்து செல்வதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும். இடுப்புப் பகுதிக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தரையில் அமர்ந்து எழ, கீழேயிருந்து குனிந்து பொருட்களை எடுக்க உதவுகிறது.
இந்தப் பயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், மனதிற்கு அமைதியும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது. சீரான சுவாசத்துடன் அமைதியாக இந்தப் பயிற்சியை செய்து வந்தால் மன அழுத்தத்தை எளிதாக நிர்வகிக்கலாம்.
இது ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சிறுநீர்ப்பை கட்டுப்பாடு, மைய நிலைத்தன்மை, திசு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஹார்மோனல் இம்பேலன்ஸ் பிரச்சனையை சரி செய்து ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கிறது. இடுப்பு வலி, கீழ் முதுகு வலியை அனுபவிக்கும் பெண்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். மூட்டு வலி இருப்பவர்களுக்கு மேலும் அது மோசமாவதைத் தடுக்கிறது. கீழே விழும் அபாயத்தையும் இது குறைக்கிறது.