
கேரளாவில் ‘மூளையை உண்ணும் அமீபா’ பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் கேட்டிருப்போம். அப்படி என்ன பிரச்னை இதில் மறைந்துள்ளது? உண்மையில் இது மூளையை தின்றுவிடுமா? அது என்ன மூளையை உண்ணும் அமீபா? இந்தியாவில் சமீபத்தில் மூளையை உண்ணும் அமீபா(brain eating amoeba) என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரியின்(Naegleria fowleri) பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன குறிப்பாக கேரளாவில்.
இந்த நுண்ணிய உயிரினம் முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis(PAM)) எனப்படும் அரிதான, அதேநேரம் ஆபத்தான மூளைத் தொற்றை ஏற்படுத்துகிறது. ஆனால், பேருக்கேத்தாற்போல் அமீபா மூளையைச் ‘சாப்பிடுவதில்லை’. அது கொஞ்சம் கொஞ்சமாக பெருகும்போது மூளை திசுக்களை அழித்து, பெரும்பாலும் ஆபத்திற்கு வழிவகுக்கிறது.
நீக்லீரியா ஃபோலேரி (Naegleria fowleri) என்பது ஒரு புரோட்டோசோவா(Protozoa) ஆகும். இது ஏரிகள், ஆறுகள், நீர் ஊற்றுகள், மோசமாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்கள் போன்ற நீர் சூழல்களில் செழித்து வளர்கிறது. இது முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 1960களில் அடையாளம் காணப்பட்டது.
இருப்பினும் அமெரிக்கா, பாகிஸ்தான் என்று உலகளவில் தோன்றியுள்ளன. இப்போது இந்தியாவில் சற்று வரத் தொடங்கியுள்ளன. இந்த அமீபா மூக்கு வழியாக மனித உடலில் நுழைகிறது. அதுவும் பொதுவாக நீச்சல், டைவிங் அல்லது மாசுபட்ட நீரில் குளிக்கும்போதுதான். பின்னர் அது ஆல்ஃபாக்டரி நரம்பு (olfactory nerve) வழியாக மூளைக்குச் செல்கிறது.
குறிப்பாக இது குடிநீரால் பரவுவதில்லை மற்றும் மக்களிடையே பரவி கொள்ளும் தன்மையும் இதற்கு இல்லை.
மற்ற உயிரினங்களுக்கு எப்படி? தற்போது வரை நெய்க்லீரியா ஃபோலேரி (Naegleria fowleri) மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது என்று அறியப்படுகிறது. மற்ற விலங்குகள் அல்லது உயிரினங்களுக்கு பரவுவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் மண், தூசியில் இது இருப்பது சுற்றுச்சூழலில் எப்படி வென்றாலும் எதிரொலிக்கலாம்.
இதன் அறிகுறிகள் PAM இன் அறிகுறிகள் அது உள்ளே நுழைந்தவுடன் 2 முதல் 15 நாட்களுக்குள் வீரியத்தை காட்டும். இதனால் இதை பற்றிய ஆரம்பகால நோயறிதல் கடினமாகிறது. ஆரம்ப அறிகுறிகளில் கடுமையான தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகியவை இருக்கும்.
தொற்று மேலும் வீரியம் அடையும்போது நோயாளிகளின் கழுத்து விறைப்பு, குழப்பம், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் இறுதியில் கோமாவிற்கு கொண்டு சென்றுவிடுமாம். இந்த நோய் உடலில் வேகமாக முன்னேறி பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் மரணத்திற்கும் வழிவகுக்கும்.
இதற்கான சிகிச்சைகள் எந்தளவில் உள்ளது?
சிகிச்சை சவாலாகவே உள்ளது. உலகளவில் இதிலிருந்து மீண்டு வந்தவர்களின் விகிதங்கள் 5%க்கும் குறைவாக உள்ளன. ஆனால் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தீவிர சிகிச்சை காரணமாக இந்தியாவில் அரிதான மீட்புகள் காணப்படுகின்றன.
தற்போதைய சிகிச்சைகளில் ஆம்போடெரிசின் பி(Amphotericin B) போன்ற எதிர்ப்பு மருந்துகள் இருக்கின்றன. அதோடு சில நேரங்களில் Miltefosine, Fluconazole, Azithromycin போன்ற மருந்துகளும் இணைக்கப்படுகின்றன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)