வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. தண்ணீர் சத்து நிறைய நிறைந்துள்ள வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடன் தாகத்தை தணித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இது குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை நீக்கி செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கோடை காலத்தில் வெள்ளரிக்காயை நம் உணவில் ஒரு முக்கிய அங்கமாக கொள்ள வேண்டும். இது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. நீரேற்றம் அதிகம் இருப்பதால் சருமத்தை பொலிவாக்கும். செரிமான பிரச்சனைகளை சரி செய்வதில் இருந்து எடை குறைப்புக்கு உதவுவது வரை வெள்ளரிக்காய் நற்பணிகளை செய்கிறது.
வெள்ளரிக்காயை நாம் கிடைக்கும் நேரத்தில் சாப்பிடுகிறோம். வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கான சரியான நேரம் பலருக்கும் தெரியாது. அதனால் , அதை நேரம் பார்த்து சாப்பிடுவதே சிறந்ததாகும்.
காலை நேரம்:
காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால், அது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும், இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இதில் தண்ணீரின் அளவும் மிக அதிகமாக உள்ளதால் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகவும் உள்ளது. வெள்ளரிக்காய் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. காலை உணவோடு நறுக்கிய வெள்ளரிக்காயை சாப்பிடுவது நன்மை தரும்.
மதிய நேரம்:
மதிய உணவின் போது வெள்ளரிக்காயை சாலட்டாக சாப்பிடுவது சிறந்தது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உணவை விரைவாக செரிக்க வைக்கிறது. வெள்ளரிக்காய் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும். மதியம் வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் எப்போதும் நல்லது. இது வயிற்றை நிரப்பி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது தவிர, நீங்கள் வெள்ளரி, தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றைக் கொண்டு சாலட் செய்து சாப்பிடலாம். இது எடை இழப்புக்கு பலன் தரும்.
இரவு நேரம்:
இரவில் வெள்ளரிக்காய் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியை தரும் உணவு என்பதால் இரவில் குறைவாக எடுத்து கொள்ளலாம். இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக வெள்ளரிக்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அது அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும். இரவில் அதிகமாக வெள்ளரிக்காய் சாப்பிடுவது வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர்ந்த உணவுகளில் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால், இரவில் வெள்ளரிக்காய் குறைவாக சாப்பிடலாம் அல்லது தவிர்க்கலாம்.