
வெள்ளிரிக்காய் அனைத்து சீசனிலும் கிடைக்கும் காயாகும். ஆனால் இதை கோடை காலத்தில் தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் கோடையில் அதிக வியர்வை உடலில் இருந்து வெளியேறும்போது கடுமையான நீரிழப்பு ஏற்படும். இதனால் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படலாம். வெள்ளரிக்காய் 95 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதிலுள்ள அதிக நீர் உள்ளடக்கம் நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு நல்ல தேர்வாகும். இதில் எலக்ட்ரோலைட் எனும் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், உடலானது நீர் இழப்பை தடுக்கிறது. வெள்ளரிக்காயை புதினா கலந்த தண்ணீருடன் சேர்த்து உண்ணும்போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெள்ளரியின் அறிவியல் பெயர் குகுமிஸ் சாடிவஸ் (Cucumis sativus). வெள்ளரிக்காய்களின் நடுவில் விதைகள் இருப்பதாலும், வெள்ளரிக்காய் செடியின் பூவிலிருந்து வளர்வதாலும், அவை தாவரவியல் ரீதியாக ஒரு பழமாகும்.
வெள்ளரியை பச்சையாகவோ, சமைத்ததாகவோ, ஊறுகாய்களாகவோ சாப்பிடலாம் அல்லது சாலட்டுகள், சூப்கள் என பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். மேலும் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
வெள்ளரிக்காய் நீர், நார்ச்சத்து, வைட்டமின்கள் (பி, சி, கே) தாதுக்கள் (தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்), மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
வெள்ளரியில் காணப்படும் சில பண்புகள் புற்றுநோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன. அவை புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
வெயில் காலத்தில் ரத்த அழுத்தத்தை தடுத்து உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்க வெள்ளரியில் இருக்கும் பொட்டாசியம் உதவுகிறது.
வெள்ளரி விதையில் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் நல்ல கொழுப்புகள் இருப்பதாகவும், வெள்ளரியில் விரைவாக காயத்தை குணமடைய உதவும் ரசாயனங்கள் இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
வெப்பத்தின் காரணமாக கண்கள் வறட்சி அடைந்து உலர்ந்து போகலாம். வெள்ளரி துண்டுகளை கண்களின்மேல் சிறிது நேரம் வைத்திருந்தால், கண்களின் வறட்சி நீங்கி கண்கள் ஒளி பெறுகின்றன.
வெள்ளரிகளில் உள்ள அனைத்து நீர்ச்சத்துக்களும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும். வைட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுகிறது மற்றும் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வைட்டமின் ஏ பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் போன்ற பல பணிகளைச் செய்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் வேகத்தை குறைக்க உதவும். இதில் குக்குர்பிட்டா என்ற வேதிப்பொருளும் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தூண்டுகிறது.
வெயில் காரணமாக ஏற்படும் சரும எரிச்சலை தணிக்க வெள்ளரி துண்டுகளை தடவலாம். வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் தவிர்க்கக்கூடாத ஒன்றாகும்.