
உடல் உறுப்பு தானம் என்பது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். நாம் உயிருடன் இருக்கும்போதே தானம் செய்யலாமா? தானம் செய்வதில் எந்தெந்த நாடுகள் முன்னணியில் உள்ளன? என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
உயிருடன் இருக்கும்போதே தானம் செய்யலாமா? உடல் உறுப்பு தானம் என்பது பிற உயிர் காக்கும் செயலாகும். இந்தச் செயல் இறந்த பிறகு மட்டுமல்ல ஒருவர் உயிருடன் இருக்கும் போதும் செய்யலாம்.
சிறுநீரகங்கள், கல்லீரலின் ஒரு பகுதி, நுரையீரல் மடல் (a lung lobe), கணையத்தின் ஒரு பகுதி (part of the pancreas) மற்றும் குடலின் ஒரு பகுதி உட்பட பல உறுப்புகள், திசுக்களைத் (tissues) உயிருடன் இருக்கும் போது தானம் செய்யலாம்.
ஒரு உறுப்பைத் தானம் செய்வது ஒரு உன்னதமான செயல் என்றாலும், அது பல வாழ்க்கை முறை மாற்றங்களுடன் தான் வருகிறது. உதாரணமாக, சிறுநீரக தானம் செய்பவர்கள் ஆரோக்கியமான உணவைப் பராமரிக்க வேண்டும். மீதமுள்ள சிறுநீரகத்தை ஆதரிக்க நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்.
கல்லீரல் தானம் செய்பவர்கள் தங்கள் கல்லீரல் மறுபடியும் வளரும் வரை அவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வழிகாட்டுதல்களை (post-surgery care guidelines) பின்பற்ற வேண்டும்.
பொதுவாக, தானம் செய்பவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தபிறகு சாதாரண வாழ்க்கையை வாழலாம். ஆனால், அவர்களின் உடல்நலம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு எப்போதும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படலாம்.
ரத்த வகை சாரா தானங்கள்:
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முக்கியமான ஒன்று ரத்த வகை பொருந்துவது தான். இருப்பினும், கண்ணில் உள்ள கருவிழிகள் போன்ற சில உறுப்புகளை ரத்த வகையை கருத்தில் கொள்ளாமல் பிறர் இறந்த பின்பு மாற்றம் செய்யலாம்.
உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?
உடல் உறுப்பு தானம் கொள்கைகள் உலகளவில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களாவே விலகிக் கொள்ளும்படி சில அமைப்புகளை (opt-out systems) உருவாக்கியுள்ளன. அதாவது அந்த நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் வெளிப்படையாக இதற்கு மறுக்காவிட்டால் அவர்கள் நன்கொடையாளர்களாக கருதப்படுகிறார்கள். ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் மற்றும் நார்வே இந்த அமைப்பைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், எந்த நாடும் உறுப்பு தானத்தைக் கட்டாயமாக்கவில்லை.
எந்த நாடுகள் அதிகம் தானம் செய்கின்றன?
உடல் உறுப்பு தானங்கள் பொறுத்தவரை ஸ்பெயின் உலகளவில் முன்னணியில் உள்ளது. அதன்பின் துருக்கி, தென் கொரியா, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)