
நமது உடலில் இரண்டு கிட்னிகள் உள்ளன. அவை தமிழில் சிறுநீரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மனித உடலின் அற்புதமான உறுப்புகளான கிட்னிகள் உடலின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளன, அவற்றின் வேலை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நமது உடலில் கிட்னிகள் எங்கே உள்ளன? (where kidney is located in our Body)
சிறுநீரகங்கள் நமது வயிற்றுப் பகுதியின் பின்னால், முதுகுத்தண்டின் இருபுறமும் அமைந்துள்ளன. இவை விலா எலும்புகளுக்கு சற்று கீழே, இடுப்புப் பகுதிக்கு மேலே காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், கல்லீரலின் காரணமாக இடது சிறுநீரகத்தை விட சற்று கீழே அமைந்திருக்கும். பீன்ஸ் வடிவில், சுமார் 10 முதல் 12 சென்டிமீட்டர் நீளமும், 5 முதல் 7 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த உறுப்புகள், ஒவ்வொரு நாளும் சுமார் 180 லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. அவற்றின் இந்த இருப்பிடம், நமது விலா எலும்புகளாலும், முதுகுத்தண்டாலும் பாதுகாக்கப்பட்டு, வெளிப்புறத் தாக்கங்களிலிருந்து தப்புவதற்கு உதவுகிறது.
சிறுநீரகத்தின் அற்புதமான செயல்பாடுகள்:
இவை மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர்ந்து (24/7) கடினமாக உழைக்கின்றன. உடலின் பல முக்கியமான செயல்பாடுகளை செய்கின்றன. இந்த முக்கியமான உறுப்புகள் அவற்றின் இருப்பிடம் காரணமாகவே, இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை திறம்படச் செய்ய முடிகிறது. அவை இரத்த நாளங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் இரத்தத்தை எளிதாகப் பெற்று, சுத்திகரித்து மீண்டும் உடலுக்கு அனுப்புகின்றன.
ரத்தத்தை வடிகட்டுதல்:
சிறுநீரகங்களின் முதன்மை செயல்பாடு உடலில் இருந்து ரத்தத்தை வடிகட்டுவதாகும். ஒவ்வொரு நிமிடமும் கிட்னிகள் அரைக் கப் ரத்தத்தை வடிகட்டுகின்றன. ரத்தத்திலிருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்து வெளியேற்றுகின்றன. ரத்தத்திலிருந்து கூடுதல் தண்ணீரை நீக்குகின்றன.
இந்த செயல்முறையின் போது சிறுநீரகங்கள் கழிவுகளை நீக்குகின்றன. பெரும்பாலான மக்கள் தினமும் 2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர். நமது உடலில் சரியான அளவு நீர் மற்றும் முக்கியமான உப்புகள் இருப்பதை சிறுநீரகங்கள் உறுதி செய்கின்றன. அதிகமாக தண்ணீர் குடித்தால், அவை அதிகப்படியான நீரை வெளியேற்றும்
உடல் ஆரோக்கியத்தில் கிட்னிகளின் பங்கு:
உடலின் ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் வைத்திருப்பதில் கிட்னிகள் பெரும்பங்கு வைக்கின்றன. சிறுநீரகங்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகின்றன. வலுவான எலும்புகளுக்கு காரணமாக உள்ள விட்டமின் டி-யை செயல்படுத்த உதவுகின்றன. சில ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் கிட்னிகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன
ஒரு சிறுநீரகம் பழுதாகி விட்டால்?
சிலருக்கு ஒரு சிறுநீரகம் பழுதாகி விட்டால் மீதி உள்ள ஒரு சிறுநீரகத்துடன் வாழ முடியும். இரண்டு சிறுநீரகங்களும் கெட்டுப் போனால் சிறுநீரக தானம் பெற்று கிட்னி பொருத்திக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)