
நமது மனமகிழ்ச்சியை தீர்மானிப்பதில் நமது உடலில் நான்கு ஹார்மோன்கள் மிக முக்கியமான செல்வாக்கினை செலுத்துகின்றன. அவற்றுள் முதன்மையானது எண்டோர்பிஃன் ஆகும். நாம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடும் போது நமது உடலில் இந்த ஹார்மோன் சுரக்கிறது. அதனால்தான், உடற்பயிற்சி செய்த பிறகு நமது மனது மகிழ்ச்சியை உணர்கிறது. மேலும் வாய்விட்டு சிரிக்கும் போது எண்டோர்பிஃன் சுரக்கிறது. அதனால்தான் ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்று கூறப்படுகிறது.
எண்டோர்பிஃன் ஹார்மோன் நமக்குக் கிடைக்க, நாம் அன்றாடம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி,பொழுதுபோக்கான விஷயங்களைப் பார்த்து மகிழ்வது போன்றவற்றில் ஈடுபடவேண்டும்.
டோஃபமைன் நமது உடலில் சுரக்கும் மற்றொரு முக்கியமான ஹார்மோனாகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கை தொடர் பயணத்தில், பெரியதாகவோ , சிறியதாகவோ ஏதாவது ஒன்றை சாதிக்கும் போது, நமது உடல் டோபஃமைன் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. நாம் செய்யும் பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுகள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. இதனால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.
வீடுகளில் பணிபுரியும் பல இல்லத்தரசிகள் முறையாக பொதுவாக பாராட்டப்படுவதில்லை. இதனால் அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஃஹார்மோன் சுரப்பதில்லை. அவர்கள் அன்றாடம் செய்யும் பணிகளுக்கு தகுந்த அங்கீகாரத்தை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதற்கு நாம் உதவ முடியும். அவர்களின் செயல்பாடுகளுக்கு சரியான பாராட்டுதல்களை நாம் இனியாவது அளிக்க வேண்டும்.
செரோடோனின் நமது உடலில் சுரக்கும் மற்றொரு முக்கியமான ஹார்மோனாகும். நாம் பிறருக்காக நம்மால் முடிந்த உதவிகளை செய்யும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. இதனால்தான் நாம் சமூகத்துக்கு பயனுள்ள ஏதாவது ஒன்றை செய்யும் போது மனமகிழ்ச்சியை உணர்கிறோம். அதனால்தான் நாம் பிறருக்குக் ஏதாவது ஒன்று கற்றுக் கொடுக்கும் போதும், சமூக ஊடகங்களில் ஏதாவது பயனுள்ள ஒரு பதிவை பகிரும் போதும், ஒருவருக்கு ஏதாவது உதவிக் கரம் நீட்டும் போதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆக்ஸிடோஸின் ஹார்மோனானது நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து, கைகுலுக்கும் போதும், அவர்களை கட்டிப்பிடிக்கும் போதும் நமது உடலில் சுரந்து மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால்தான் நாம் வீட்டில் நம் மனைவியையும், குழந்தைகளையும் அன்பாக கட்டிப்பிடித்து அரவணைக்கும் போது அலாதியான மகிழ்ச்சியை உணர்கிறோம்.
இந்த ஹார்மோன்கள் சுரக்க நாம் தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது சிறிய சாதனையையாவது நிகழ்த்த வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகையில் நாம் பிறர் நலம் பெறும் செயல்களில் ஈடுபட வேண்டும். குழந்தைகளை அன்பாக அரவணைக்க வேண்டும்.