நம் உடலில் வைட்டமின்கள் மற்றும் சில சத்துக்கள் குறையும்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. வைட்டமின் பி குடும்பத்தில் உள்ள முக்கியமான வைட்டமின், வைட்டமின் பி2 என்னும் ரிபோஃப்ளேவின் ஆகும். வைட்டமின் பி2 நம்முடைய உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், நாம் உண்ணும் மாவுச்சத்து என்னும் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து ஆற்றலை பிரித்தெடுக்கவும் இது துணை புரிகிறது.
பொதுவாகவே, பி குழும வைட்டமின்கள் அனைத்தும் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்சிஜனைச் சுமந்து செல்வதற்கு இது உதவுகிறது. இந்த வைட்டமின் உடலில் துணை நொதிகளாக மாறி உடலில் பல்வேறு உயிரியல் - வேதியல் மாற்றங்கள், குறிப்பாக ஆக்ஸிகரணம் -ஆக்ஸிஜன் குறைத்தல் ஆகியவை நடைபெற உதவுகிறது.
காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, பால், இறைச்சி என ஏறத்தாழ நாம் சாப்பிடும் அனைத்து பொருட்களிலும் ஓரளவு இந்த வைட்டமின் உண்டு. நம் உணவில் உள்ள பிற சத்துக்களான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் பல சுரப்பிகளின் ஆற்றலுக்கு ரிபோஃப்ளேவின்தான் செயலூக்கியாக இருக்கிறது.
பருவ மாற்றங்களில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று வாய்ப்புண். உதடுகளின் இரண்டு ஓரங்களில் அறுத்தது போல பிரிந்து கிடக்கும். இது மட்டுமின்றி, நாக்கு முழுவதும் புண்ணாகி சிவந்து காணப்படும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் காரமான உணவை உட்கொள்ள முடியாது. வாய்ப்புண்ணுக்கும் குடல் புண்ணுக்கும் சிறந்த மருந்தாக மணத்தக்காளி கீரை பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். இந்த மணத்தக்காளி கீரையில் அதிக அளவில் ரிபோஃப்ளேவின் இருக்கிறது.
ரிபோஃப்ளேவின் அதிகமுள்ள உணவுகள் மணத்தக்காளி கீரை, கல்லீரல், உலர்ந்த பூஞ்சை, முட்டை, மாவு, கொழுப்பு எடுக்கப்பட்ட பால், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றில் அதிக அளவு ரிபோஃப்ளேவின் உள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக பால், முட்டை, இறைச்சி மற்றும் மீன், தானியங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் ரிபோஃப்ளேவின் உள்ளது. பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், தண்டுகள் போன்றவற்றிலும் ஓரளவு ரிபோஃப்ளேவின் உள்ளது.
நமது கண்களில் ரெட்டினாவில் உள்ள ரிபோஃப்ளேவின் ஒளியின் வினையால் ஆப்டிக் நரம்பை தூண்டி விட உதவுகிறது. ரிபோஃப்ளேவின் குறைபாட்டினால் முக்கியமாக வாய் மற்றும் முக நோய்கள், கண் நோய்கள், ஆண் பெண் உறுப்பு நோய்கள், வாயின் ஓரங்களில் புண்கள், உதடுகளில் வெடிப்பு, மூக்கு மற்றும் உதட்டோரத்தில் சருமம் கறுப்பாதல் போன்றவையும் ரிபோஃப்ளேவின் குறைபாட்டால் உண்டாகின்றன. மூன்று வாரங்கள் தேவையான அளவு ரிபோஃப்ளேவின் அடங்கிய உணவுகளை உட்கொள்வதால் இதனை மாற்றி விடலாம்.
ஆரோக்கியம் காக்க நோய்க்கான காரணத்தை அறிந்து கொண்டால் அதை தீர்ப்பதற்கான வழியும் எளிதில் அதிலிருந்தே கிடைத்துவிடும்.