முருங்கை மரம் இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு மரமாகும். இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் நிறைந்தது. குறிப்பாக, முருங்கைக்காய் அதன் சத்துக்கள் நிறைந்த தன்மையால் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவில் முருங்கைக்காயை யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி விரிவாகக் காண்போம்.
முருங்கைக்காய் கால்சியம், இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நம் உடலுக்குத் தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்களை வழங்குகிறது.
முருங்கைக்காயை யார் சாப்பிடலாம்?
முருங்கைக்காய் நார்ச்சத்து நிறைந்தது, இது செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைப் போக்கும். மேலும், இதில் இரும்புச்சத்து இருப்பதால், ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்காய் சாப்பிடுவது நல்லது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்தும்.
சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக முருங்கைக்காய் செயல்படும். முருங்கைக்காய் விதைகள் வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டவை. கண் பிரச்சனை இருப்பவர்கள் முருங்கைக்காய் தாராளமாக சாப்பிடலாம். அதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சருமம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு.
முருங்கைக்காயை யார் தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்காயை மிதமாகவே உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொள்வது கருப்பையை சுருக்கி பிரசவத்தைத் தூண்டும் அபாயம் உள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் முருங்கைக்காயை மிதமாக சாப்பிடுவது நல்லது. இது குழந்தைகளுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தும்.
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் முருங்கைக்காயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது. அதேபோல கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களும், முருங்கைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் ப்ளீஸ் முருங்கைக்காய் சாப்பிட வேண்டாம். இத்துடன் சர்க்கரை நோய் உள்ளவர்களும் முருங்கைக்காயை மிதமாகவே உட்கொள்ள வேண்டும்.
முருங்கைக்காயை பல வழிகளில் உட்கொள்ளலாம். இதை கூட்டு, துவையல், சூப் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். மேலும் முருங்கை இலையை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. முருங்கை விதையை பொடி செய்து பால் அல்லது தயிரில் கலந்து குடிப்பது, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
முருங்கைக்காய் ஒரு சிறந்த சூப்பர் ஃபுட். இது நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்களை வழங்குகிறது. ஆனால், எந்த உணவையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. எனவே, நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் முருங்கைக்காயை மிதமாகவே உட்கொள்ள வேண்டும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருப்பவர்கள், முருங்கைக்காயை உட்கொள்வதற்கு முன், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் சாப்பிடுவது நல்லது.