

கர்ப்பம் தரிக்கும் பெண்கள் நார்மல் டெலிவரி தான் விரும்புவார்கள். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புவார்கள். பெரும்பாலான டாக்டர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், தீராத பட்சத்தில் சிசேரியன்தான் கை கொடுக்கிறது.
பெண்கள் கர்ப்பம் ஆனதில் துவங்கி கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கரு வளர்ச்சியில் குறைபாடு, ஹை ரிஸ்க் போன்ற காரணங்களால் சிசேரியன் சிபாரிசு செய்யப்படுகிறது.
இது போன்ற சமயங்களில் நார்மல் டெலிவரி ஆவதற்கு என சில காலக்கெடு உள்ளது. பிரச்னை வரலாம் என்று தெரிந்தால் உடனடியாக சிசேரியன்(cesarean) செய்யப்படுகிறது. இந்த சிசேரியன் 10 சதவீத பெண்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. 90 சதவீத பெண்களுக்கு நார்மல் டெலிவரி ஏற்படுகிறது.
இதில் எதிர்பாராமல் வரும் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 37 வாரங்களுக்கு பின் எப்போது வேண்டுமானாலும் பிரசவ வலி வரலாம். இயல்பாக வலி வந்தாலும், மருந்துகள் மூலமாக வலி வந்தாலும் நார்மல் டெலிவரி ஆவதற்கு சில காரணங்கள் சாதகமாக அமைய வேண்டும்.
குழந்தையின் தலை கீழ்நோக்கி வருவது கர்ப்பப்பை வாய் 10 சென்டிமீட்டர் வரை திறப்பது போன்ற காரணங்களாகும். குழந்தையின் தலை 9.5 சென்டிமீட்டர் இருக்கும். கர்ப்பப்பை வாய் 10 சென்டிமீட்டர் திறந்தால் தான் குழந்தையின் தலை எளிதாக வெளியே வரும். சிலருக்கு நாலு சென்டிமீட்டர் திறந்து அதன் பின் எத்தனை ஊசி மருந்து செலுத்தினாலும், அதற்கு மேல் கர்ப்பப்பை வாய் திறக்காது. பத்து சென்டிமீட்டர் திறக்காவிட்டால் பிரசவ வலி எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் தலை வெளியே வருவது கடினம்.
இயல்பாக, நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை துடிக்க வேண்டிய குழந்தையின் இதயம் 110 க்கு கீழ் துடித்தால், கர்ப்பத்திலேயே குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படும். அந்த நேரத்தில் சிசேரியன் அவசியமாகிறது.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முதன்முதலாக மலம் கழிக்கும் திரவத்தின் பெயர்தான் மெகோனியம். இந்த நேரத்தில் குழந்தையின் துடிப்பு சீராக இருந்தால் அடுத்த ரெண்டு மூணு மணி நேரத்தில் பிரசவம் ஆகிவிடும்.
குழந்தை அடர்த்தியாக மலம் கழித்து கர்ப்பப்பை பத்து சென்டிமீட்டர் திறந்து பிரசவம் ஆவதற்கு ஐந்து ஆறு மணி நேரம் ஆகலாம் என்ற சூழ்நிலையில், குழந்தை மலத்தை விழுங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். இது நுரையீரலுக்குள் சென்று தீவிர தொற்று ஏற்படும்.
அதிக கட்டணத்திற்காக சிசேரியன் செய்யப்படுவது என்று சொல்வது தவறு. நார்மல் டெலிவரி மூலம் குழந்தையை கையில் எடுக்கும் போது, பெற்ற தாயைப் போன்ற மகிழ்ச்சி டாக்டர்களுக்கும் ஏற்படுவதுண்டு.
தாய், குழந்தை இருவரின் நலனை கருத்தில் கொண்டு சிசேரியனா அல்லது நார்மலா என்பதை டாக்டர் தான் முடிவு செய்ய வேண்டும்.
எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)