வேலைகளை பல மணி நேரங்கள் குனிந்து செய்வதாலும், நிமிர்ந்து அமராமல் இருப்பதாலும் பலருக்கு முதுகில் கூன் விழுகிறது. முதுகில் கூன் விழுவதற்கு வயதையும் காரணமாக கூறுவர், சிலர். ஆனால், வயதானவர்களுக்கு விழும் கூனிற்கும் இளம் வயதில் இருப்பவர்களுக்கு விழும் கூனிற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. இளம் வயதில் கூன் விழுவது அவரவரது வாழ்வியல் சூழல்களை பொறுத்து அமையும்.
நாம் தலையில் வைத்து அதிக பளு தூக்குவதாலும், தலையை கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வதாலும் கழுத்து எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், முதுகு எலும்பு தேய்மானம் அடைந்து கூன் விழும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது
தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இந்த ‘டெக் நெக்' அல்லது 'டெக்ஸ்ட் நெக்’ என்பவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது, நாம் நெடு நேரம் மொபைல், லேப்டாப், டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை குனிந்து உபயோகிப்பதால் ஏற்படும். இதனால் நமக்கு கழுத்து வலி ஏற்படும். அதுவும், கழுத்து வலி பல நாட்கள் நம்மை பாடாய் படுத்தி எடுக்கும். இதனாலும் கழுத்தில் சிலருக்கு கூன் விழலாம்.
எந்த சாதனத்தை உபயோகப்படுத்தினாலும் அதை குனிந்து பயன்படுத்தாமல், கண்களுக்கு நேராக வைத்து உபயோகிப்பது நல்லது. அலுவலகத்தில் உங்களது நாற்காலி, நீங்கள் உபயோகிக்கும் லேப்டாப் டேபிளை விட உயரமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்க்ரீன் டைமில் இருந்து அடிக்கடி இடைவேளை எடுப்பது, கூன் விழ விடாமல் தடுக்கும். இது கண்களுக்கும் நல்லது. அப்படி பிரேக் எடுக்கும் போது உங்களது கழுத்து தசைகள் மற்றும் தோள்பட்டை தசைகளை கை கொண்டு மசாஜ் செய்து ரிலாக்ஸ் செய்யுங்கள்.
கழுத்து வலியை சரி செய்ய, பல மசாஜ்கள் இருக்கின்றன. சில பயிற்சிகளும் இருக்கின்றன. அடிக்கடி கைகளை முன்னிருத்தி உங்கள் கழுத்துக்களை சைத்து இறுக்கத்தை சரி செய்வது ஒரு வித உடற்பயிற்சிதான். இது கழுத்து பகுதியில் தசை பிடிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். கழுத்து வலி பெண்களைக் காட்டிலும் ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது.
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். முதுமை வந்து விட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மணிகணக்கில் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது அனைவருக்குமே அன்றாட பழக்கமாகி விட்டது. அதனால் இளமையிலே கூன் விழுவதும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இதனை ஆரம்பத்திலே தடுக்க ஒரு சில யோகப்பயிற்சிகளும், உடல் பயிற்சிகளும் உதவுகின்றன. மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியின் தீவிரத்தையும் கூன்விழுவதையும் நம்மால் தவிர்க்க முடியும்.