நாம் நம்முடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு சரியான உணவுகளைத் தேர்வு செய்வது அவசியம். நமக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்து உணவுகளை பெரும்பாலும் யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நமது செரிமானத்தை மேம்படுத்துவது முதல் இதை ஆரோக்கியத்தை பலப்படுத்துவது வரை பல நன்மைகளை வழங்குகின்றன. இந்தப் பதிவில் ஏன் நாம் தினசரி அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்? என்பதன் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வோம்.
செரிமான ஆரோக்கியம்: நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதால் நமது செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. டயட்ரி பைபர் நமது மலத்தில் அதிக அளவில் சேர்ந்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்துக்களால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படுகிறது.
எடை பராமரிப்பு: அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகள் ஒரு திருப்திகரமான உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. இது நீண்ட காலத்திற்கு பசியைத் தூண்டாமல் இருப்பதால், அதிக உணவு எடுத்துக் கொள்வதைத் தடுத்து உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. எனவே இதன் மூலமாக ஆரோக்கியமற்ற மற்றும் துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் தடுக்கப்படுவதால், ஆரோக்கியமான உடலமைப்பை அமைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்: நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் விலைமதிப்பற்ற ஒன்றாகும். நார்ச்சத்து, ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அதிகம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது. இதனால் உடனடி ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. எனவே அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இதனால் Type 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் குறைகிறது.
இதய ஆரோக்கியம்: உலக அளவில் அதிகப்படியான இறப்புக்கு இருதய நோய் முக்கிய காரணமாக உள்ளது. அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. ஓட்ஸ், பீன்ஸ் மற்றும் பழங்கள் போன்ற உணவுகளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலமாக குடலில் உள்ள கொலஸ்ட்ரால் உறிஞ்சும் தன்மை குறைவதால், ரத்த சுத்திகரிப்பிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
குடல் நுண்ணுயிரிகள்: நமது குடலில் உள்ள ட்ரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், குடல் பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. இது அவற்றின் வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
எனவே நாம் தினசரி அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இவை பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிலேயே அதிகம் இருப்பதால், உங்கள் உணவுப் பழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.