
பொதுவாகவே நாம் எல்லோருமே உணவை உண்ணும் போது பேசிக்கொண்டே சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. 'பேசிக்கொண்டே சாப்பிட்டாதே, உணவு ஜீரணமாகாது, சாப்பிடும் போது பேசக்கூடாது' என்று பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், நாம் அதை ஒருபோதும் காது கொடுத்து கேட்காமல் அலட்சியமாக இருந்து விடுவோம். ஆனால், அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய மருத்துவ ரீதியான உண்மை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டால் நாம் யாரும் இனி சாப்பிடும் போது பேசவே மாட்டோம்.
சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது. தெரியுமா உங்களுக்கு?? இதுபோல் இதற்குள் இன்னும் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அப்படி சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
தொண்டையில் இருந்து செல்லும் உணவுக்குழாயும், மூக்கில் இருந்து செல்லும் மூச்சுக்குழாயும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. மூச்சுக்குழாய் எப்போதும் திறந்தே இருக்கும் நிலையில், உணவு உட்கொள்ளப்படும் போது மட்டும் உணவுக்குழாய் திறக்கப்பட்டு மூச்சுக்குழாய் மூடிக் கொள்ளும். உணவு உள்ளே சென்றதும் மீண்டும் மூச்சுக்குழாய் திறந்து கொள்ளும்.
இயல்பாக நிகழும் இந்த செயல்பாட்டில், இடையிடையே பேசுவதால் இடையூறு ஏற்பட்டு உணவு மூச்சுக்குழாய்க்குள் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. இது போன்ற சூழல்களில் ஏற்படும் திடீர் இருமலையே புரையேறுதல் என கூறுகிறோம்.
மேலும் நாம் யாரைப் பற்றியாவது நினைத்து கொண்டு சாப்பாட்டில் தியானமில்லாமல் சாப்பிடும் போதும், தொலைக்காட்சி அல்லது மொபைலை பார்த்துக் கொண்டே சாப்பிடும் போதும், அவசர அவசரமாக மென்று விழுங்கும் போதும் மற்றும் நின்று கொண்டே சாப்பிடும் போதும் இவ்வாறு புரையேறலாம். புரையேறினால் யாராவது நினைக்கிறார்களோ என்ற கருத்து முற்றிலும் தவறு, நாம் தான் யாரையோ அல்லது எதையோ நினைத்துக் கொண்டு ஏடாகூடமாக உணவை விழுங்கும் போது புறையேறுகிறது.
அது மட்டுமில்லாமல், 'நொறுங்க தின்றால் நூறு வயது' என்கிற பழமொழிக்கேற்ப பேசாமல் சாப்பிடும் போது உணவை நன்கு மென்று சாப்பிட முடியும். மேலும், உணவு உண்ணும் போது பேசாமல் முழு கவனத்தை அதில் செலுத்தினால், உணவு போதும் என்ற செய்தியை மூளையால் தெளிவாக உடலுக்கு பரிமாற முடியும்.
இதனால், தேவைக்கு அதிகமான உணவு உண்ணுதல் மற்றும் அதனால் ஏற்படும் உடல் பருமன் போன்ற சிக்கல்களையும் சுலபமாக தவிர்க்கலாம். தூங்கும் போது கூட சில நேரங்களில் உமிழ்நீர் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிட்டாலும் கூட புரையேறும். இதுவே, தூக்கத்தில் புரையேறுவதற்கான காரணம்.
இனிமேல் சாப்பிடும் போது பேசாதீர்கள் மற்றும் யாரை பற்றியும் எதை பற்றியும் யோசிக்காமல் பொறுமையாக உணவை மென்று உண்ணவும்!!!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)