கடமுடவென வரும் வயிற்று சத்தத்தைக் குறைக்க எளிய வழி என்ன?

போர்போரிக்மி (Borborygmi) என்றால் என்ன? பெரிஸ்டால்சிஸ் இயக்கம், காற்று, மன அழுத்தம் மற்றும் மருத்துவ எச்சரிக்கைகள்.
Stomach Growling | வயிறு சத்தம் போடுதல்
Stomach Growling | வயிறு சத்தம் போடுதல்Image Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

வயிறு கடமுடவென சத்தம் போடுவது பசியால் மட்டுமல்ல; அது செரிமான மண்டலத்தின் இயல்பான தசைச் சுருக்கங்களாலும் இயக்கத்தாலும் ஏற்படும் ஒரு நிகழ்வாகும். மருத்துவ அறிவியலில் இந்த சத்தத்தை போர்போரிக்மி (Borborygmi) என்று அழைக்கிறார்கள். இந்த சத்தம் உண்மையில் இரப்பையிலிருந்து மட்டுமல்லாமல், பெரும்பாலும் சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் இருந்தே உருவாகிறது. இதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன.

வயிறு சத்தம் போடுவதற்கான முக்கிய அறிவியல் காரணங்கள்:

பெரிஸ்டால்சிஸ் (Peristalsis) இயக்கம்:

நாம் உண்ணும் உணவு, திரவம் மற்றும் வாயுவை உணவுக் குழாய் வழியாகக் கீழே தள்ளுவதற்கு குடல் தசைகள் அலை அலையாக சுருங்கி விரியும். நாம் சாப்பிட்ட உணவை செரிக்க இரப்பை மற்றும் சுமார் 30 அடி நீளமுள்ள சிறுகுடல், பெருங்குடல் தசைகள் இப்படி அலை அலையாகச் சுருங்கி விரிகின்றன. இது ஒரு வாஷிங் மெஷின் சுழல்வதைப் போல தசை சுருக்கங்களின் பொழுது திரவத்தையும் வாயுவையும் ஒன்றாகக் கலக்கி குறுகிய பாதை வழியாக அழுத்தப்பட்டு நகரும் பொழுது உருவாகும் சத்தமே வயிறு இரைச்சலாகக் கேட்கிறது.

குடலைச் சுத்தப்படுத்தும் சுழற்சி:

உணவு சாப்பிட்டு சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு வயிறு காலியாகும் பொழுது, இரப்பை மற்றும் குடல் சுவர்களில் வலுவான தசைச் சுருக்கங்கள் ஏற்படும். இது குடலில் தங்கியிருக்கும் மீதமுள்ள உணவுத் துகள்கள், சளி மற்றும் பாக்டீரியாக்களைப் பெருங்குடலுக்குத் தள்ளி சுத்தம் செய்யும் பணியாகும்.

பசியும் எதிரொலியும்:

பசி எடுக்கும் பொழுது மூளையின் தூண்டுதலால் சுரக்கும் கிரெலின் (Ghrelin) என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்து வயிறு மற்றும் குடல் தசைகளைச் சுருங்கச் செய்து சத்தத்தை உண்டாக்குகின்றன. அப்போது வயிற்றில் சத்தத்தை மட்டுப்படுத்த உணவு இல்லாததால், உள்ளே இருக்கும் காற்றும் திரவமும் காலியான இடத்தில் எதிரொலித்து (Resonance) அதிக சத்தமாகக் கேட்கிறது. அதாவது வயிற்றில் உணவு இருக்கும் போது அது தசை அசைவுகளால் ஏற்படும் சத்தத்தைக் குறைத்து (Muffle) விடும். வயிறு காலியாக இருக்கும் பொழுது உள்ளே காற்று மற்றும் திரவம் மட்டுமே இருப்பதால் சத்தம் எதிரொலித்து வெளியில் சத்தமாக கேட்கிறது.

பசியைத் தவிர்த்து சத்தம் ஏற்படுவதற்கான பிற காரணங்கள்:

காற்றை விழுங்குதல்:

வேகமாக சாப்பிடுவது, ஸ்ட்ரா மூலம் பானங்கள் குடிப்பது, சூயிங்கம் மெல்லது அல்லது கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதால் அதிகப்படியான காற்று வயிற்றுக்குள் சென்று சத்தத்தை ஏற்படுத்துகின்றன.

Stomach Growling | வயிறு சத்தம் போடுதல்
Stomach Growling | வயிறு சத்தம் போடுதல்

உணவுப் பழக்கமும் வாயுவும்:

அவசரமாக சாப்பிடும் போது காற்றை விழுங்குவது அல்லது செரிமானம் கடினமான உணவுகளான பால் பொருட்கள், பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் மற்றும் செயற்கை இனிப்புகள் போன்றவற்றை செரிக்கும் பொழுது குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்படும் பொழுது அதிக வாயுவை வெளியிடுவதால் சத்தம் அதிகரிக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம்:

மூளைக்கும் குடலுக்கும் இடையே நேரடி நரம்புத் தொடர்பு (Brain-gut axis) உள்ளது. மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்படும் பொழுது வயிறு காலியாக இல்லாவிட்டாலும் குடல் தசைகளின் இயக்கம் வேகமடைந்து சத்தம் உண்டாகலாம்.

இதையும் படியுங்கள்:
உள்ளங்கை அரிப்பு எடுத்தால் பணம் வருமா? நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் உடல் அறிவியல்!
Stomach Growling | வயிறு சத்தம் போடுதல்

வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுகள்:

வயிற்றுப்போக்கு அல்லது குடல் தொற்று ஏற்படும் பொழுது குடல் தசைகள் வழக்கத்தை விட வேகமாகச் சுருங்குவதால் அதிக சத்தம் கேட்கும்.

வயிற்று இரைச்சலை குறைப்பதற்கான வழிகள்:

உணவுகளுக்கிடையே நீண்ட இடைவெளி விடாமல் சிறிய அளவிலான உணவை அடிக்கடி எடுத்துக் கொள்வதும், நீரேற்றத்துடன் இருப்பதும், அதிக வாயுவை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும் செய்யலாம். அத்துடன் மன அழுத்தத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கு ஆழ்ந்த சுவாசம் மற்றும் லேசான உடற்பயிற்சி செய்வதும் சிறந்த பலனைத் தரும்.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும் தெரியுமா?

வயிறு சத்தம் போடுவது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படுவதன் அறிகுறியாகும். இருப்பினும் இந்த சத்தத்துடன் கடுமையான வயிற்று வலி அல்லது வீக்கம் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி அல்லது காய்ச்சல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல் அல்லது காரணமின்றி எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
30 வினாடி போதும்! காபி, டீ, பிரியாணி கறை பற்களில் ஒட்டாமல் தடுக்க!
Stomach Growling | வயிறு சத்தம் போடுதல்

Reference: