டிபி (TB) என்னும் கொடிய உயிர் கொல்லும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்ற பாக்டீரியா டிபி நோயை உருவாக்குகிறது. இந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் இருமும் போதும், தும்மும்போதும், பேசும்போதும் கூட லட்சக்கணக்கான நோய்க் கிருமிகள் அவர் உடலிலிருந்து வெளியேறி காற்றில் கலந்துவிடுகின்றன.
டைஃபாய்ட் போன்ற வேறு சில தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவரை இன்னொருவர் தொட்டுப்பேசும் போது, மட்டுமே அந்த நோய்க் கிருமிகள் மற்றவர் உடலுக்குள்ளும் பரவும். ஆனால், டிபி நோய்க் கிருமிகள் காற்றில் பல மணி நேரம் கலந்திருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்கள் உடலுக்குள் சுலபமாகப் புகுந்து நோயை உண்டாக்கிவிடும்.
இந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை வேளை தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம். நோயின் தீவிரத்திற்கு ஏற்றபடி ஆறு மாதம் அல்லது ஒரு வருட காலம் வரை தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இடையில் மருந்தை நிறுத்திவிட்டாலோ அல்லது நோயாளி சுயமாக வேறு மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தாலோ இக்கிருமிகளை கட்டுப்படுத்துவது இயலாததாகிவிடும். அதாவது கிருமிகள் டிரக் ரெசிஸ்டன்ட் (drug resistants) ஆகிவிடும். பின்பு அவை மருந்துக்கு கட்டுப்படாது. இதுவே சிகிச்சையில் உள்ள மிகப் பெரிய சவால்.
இந்நோயின் ஆரம்ப காலத்தில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, இருமல், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும். உடனடி சிகிச்சை எடுக்க தவறினால் பிற உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், போதுமான அளவு நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், நீரிழிவு நோய், எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை டிபி நோய் தாக்கும்போது மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
சிலருக்கு ஆரம்பத்தில் இந்நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாமல் இருக்கலாம். இந்நிலையை லேட்டென்ட் டிபி (Latent TB) என்பர். சில வருடங்களுக்குப்பின் கிருமிகள் ஆக்ட்டிவ் ஆகி நோயின் தீவிரத்தை காட்ட ஆரம்பிக்கும்.
இந்நோயின் அபாயத்தன்மையை மனதிற்கொண்டு முன் ஜாக்கிரதையுடன் நடந்துகொள்வது நலம் தரும்.