

சிறுநீர் அடங்காமை எதனால் ஏற்படுகிறது?
அறிகுறிகள்:
இருமல், தும்மல் அல்லது சிரிக்கும் போது ஏற்படும் கசிவு
சிறுநீர் கழிக்கத் தோன்றும் தீவிரமான உணர்வு
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை
கழிப்பறைக்குச் செல்லும் முன்பே சிறுநீர் கசிந்து விடுவது
ஒரு நாளைக்கு 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது அல்லது இரவில் அடிக்கடி எழுவது
காரணங்கள்:
சிறுநீர் அடங்காமை(Urinary Incontinence) என்பது சிறுநீர்ப்பையின் மீது கட்டுப்பாட்டை இழந்து, தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இது இடுப்புத் தள தசைகள் பலவீனமடைதல், நரம்பு பாதிப்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்(UTIs) மற்றும் வயது முதிர்வு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
இருமல், தும்மல், சிரிப்பு அல்லது உடற்பயிற்சியின் பொழுது ஏற்படும் அழுத்தத்தால் சிறுநீர் கசிவது, பிரசவம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது உடல் பருமன் காரணமாக இடுப்பு தசைகள் பலவீனம் அடைவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத தீவிர உணர்வு ஏற்படுவது. இது பொதுவாக அதிகப்படியான செயல்பாடு கொண்ட சிறுநீர்ப்பை அல்லது நரம்பு கோளாறுகளால் ஏற்படுகிறது.
சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாமல், சொட்டு சொட்டாக வெளியேறுவது, சிறுநீர்ப்பை தசைகள் பலவீனம் அடைவது அல்லது அடைப்புகள் காரணமாகவும் இது உண்டாகிறது.
நாள்பட்ட மலச்சிக்கல், நீரிழிவு நோய் மற்றும் புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும் இதற்கு காரணங்களாக அமையலாம்.
காபி மற்றும் ஆல்கஹால் போன்ற சில பானங்களும் காரணமாக இருக்கலாம்.
இது ஆண்களை விட பெண்களை ஏன் அதிகம் பாதிக்கிறது தெரியுமா?
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பம், பிரசவம் மற்றும் மெனோபாஸ்(மாதவிடாய் நிற்பது) போன்ற பிரத்யேக காரணங்களாலும், அவர்களின் உடற்கூறியல் அமைப்பு(pelvic floor muscles) காரணமாகவும் ஆண்களை விட சிறுநீர் அடங்காமை பெண்களை அதிகமாக பாதிக்கிறது. கருப்பையின் எடை மற்றும் பிரசவத்தின் பொழுது ஏற்படும் அழுத்தங்கள், சிறுநீர்ப்பையைத் தாங்கும் இடுப்பு தசைப் பகுதியை பலவீனப்படுத்துகின்றன. மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைகிறது. இதனால் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் திசுக்கள் மெலிந்து, அவற்றின் நெகிழ்வுத்தன்மை குறைந்து சிறுநீர் கசிவு ஏற்படுகிறது.
முக்கியமாக பெண்களின் சிறுநீர்க்குழாய் ஆண்களை விட மிகக் குறுகியதாக இருப்பதால், தசைகளில் சிறிதளவு தளர்வு ஏற்பட்டாலும் எளிதில் சிறுநீர் கசிவு உண்டாகிறது. வயது அதிகரிக்கும் போது தசை நார்களின் உறுதித்தன்மை குறைகிறது. இது பெண்களில் சிறுநீர் அடங்காமை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆண்களில் சிறுநீர் அடங்காமை பாதிப்பு பொதுவாக புரோஸ்டேட்(prostate) சுரப்பி தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகிறது. சிறுநீர் அடங்காமை என்பது சாதாரணமான ஒரு பிரச்சனை தான். இதற்குப் பல எளிய மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை தீர்வுகள் உள்ளன.
தீர்வுகள்:
சிறுநீர் அடங்காமைக்கு உடற்பயிற்சிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம். இடுப்பு தசைப் பகுதியை வலுவாக்குவது, சிறுநீர்ப்பை பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இதற்கு பெரிதும் உதவும்.
A) வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள்:
அதிக எடை இடுப்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி கசிவை உண்டாக்கும். இதற்கு எடையைக் குறைப்பதன் மூலம் இந்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.
காஃபின்(காபி, டீ), அல்கஹால் மற்றும் அதிக காரம் அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகள் சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டும். செயற்கை இனிப்புகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கவும்.
நீரிழப்பைத் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தடுக்க, தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
மலச்சிக்கல் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
புகைப்பிடித்தல் இருமலை உண்டாக்கி, இடுப்பு தசைகளை பலவீனப்படுத்தும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
B) உடற்பயிற்சிகள் மற்றும் சிறுநீர்ப்பை பயிற்சி:
கெகல் உடற்பயிற்சி(Kegel exercises) இடுப்புத் தள தசைகளை இறுக்கிப்பிடிக்கும். இந்த உடற்பயிற்சி சிறுநீரகக் குழாய் மற்றும் சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்துகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை அவசரப்படாமல் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையை (உதாரணத்திற்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை என்று )பின்பற்றி சிறுநீர் கழிக்கப் பழகலாம்.
C) மருத்துவ சிகிச்சைகள்:
சிறுநீர்ப்பை தசைகளை தளர்த்தவும், தன்னிச்சையான சுருக்கங்களைக் குறைக்கவும் மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர்.
சிலருக்கு போடோக்ஸ் (Botox) ஊசிகள் அல்லது நரம்புத் தூண்டுதல் (Nerve stimulation) சிகிச்சைகள் தேவைப்படலாம். அறுவை சிகிச்சைகள் மூலம் இடுப்பு தசைகளைத் தாங்கும் முறைகளும் (Sling surgery) உள்ளன.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference