

நாம் சுவாசிக்கும் காற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை இணையதளச் சேவைகளுக்கு இன்றைய காலத்தில் கொடுத்து வருகிறோம். காலையில் கண் விழிப்பது முதல் இரவில் உறங்கச் செல்வது வரை நம் விரல்கள் ஸ்மார்ட்போன்களிலேயே தவழ்கின்றன. வேலை நிமித்தமாகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ நாள் முழுவதும் ஆன்லைனில் இருப்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் பிரச்னை என்னவென்றால், நாம் ஓய்வெடுக்கச் செல்லும் இரவு நேரங்களிலும் இந்த டிஜிட்டல் உலகத்துடன் தொடர்பிலேயே இருக்கிறோம். பெரும்பாலான வீடுகளில் 24 மணி நேரமும் வைஃபை ரௌட்டர்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. உறங்கும்போது கூடத் தலைக்கு அருகிலேயே மொபைல் டேட்டாவை ஆன் செய்து வைத்துவிட்டுத் தூங்குகிறோம்.
இந்த வசதியான பழக்கம் நம் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்குமா என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அறிவியல் சொல்லும் உண்மை!
வைஃபை மற்றும் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் அலைகள் அனைத்தும் 'அயனியாக்கப்படாத கதிர்வீச்சு' வகையைச் சார்ந்தவை என்று அறிவியல் உலகம் கூறுகிறது. அதாவது மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் எக்ஸ்-ரே கதிர்களைப் போல இவை நம் உடலில் ஊடுருவி டிஎன்ஏ-வைச் சிதைக்கும் அல்லது மாற்றியமைக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தவை அல்ல.
வீடுகளில் நாம் பயன்படுத்தும் ரௌட்டர்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவு மிகவும் குறைவு என்பதால், இவை உடனடியாகப் புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இதுவரை இல்லை. இருப்பினும், ஆபத்து இல்லை என்பதற்காக இதைத் தொடர்ந்து அனுமதிக்கலாம் என்று அர்த்தமல்ல.
நேரடியான பாதிப்புகளை விட, மறைமுகமான பாதிப்புகள் அதிகம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நம் மூளையானது இருளை உணரும்போது 'மெலடோனின்' என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இதுதான் நமக்கு ஆழ்ந்த மற்றும் நிம்மதியான உறக்கத்தைத் தருகிறது.
ஆனால் வைஃபை மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து வெளிவரும் நுட்பமான அலைகளும், நீல நிற ஒளியும் இந்த ஹார்மோன் சுரப்பைத் தடுக்கின்றன. இதனால் மூளை குழப்பமடைந்து விழிப்பு நிலையிலேயே இருக்க முயற்சி செய்கிறது. இதன் விளைவாகப் படுத்தவுடன் தூக்கம் வராமல் புரண்டு படுப்பது, நடுராத்திரியில் விழிப்பு வருவது போன்ற 'இன்சோம்னியா' பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
தொடர் பாதிப்புகள்!
சரியான தூக்கம் இல்லாதது வெறும் சோர்வை மட்டும் தருவதில்லை. இது பல நோய்களுக்கான வாசலைத் திறந்துவிடுகிறது. காலையில் எழும்போது புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பது, நாள் முழுவதும் எரிச்சலாக உணர்வது, கவனச் சிதறல் ஆகியவை இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள். நீண்ட நாட்களாகத் தூக்கமின்மை தொடரும்போது அது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் கடுமையான மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்பம் நம் வசதிக்காகப் படைக்கப்பட்டது, அது நம் எஜமானாக மாறக்கூடாது. இரவு தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகவே வைஃபை ரௌட்டரை அணைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது. அதேபோல, ஸ்மார்ட்போன்களைத் தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு படுப்பதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரைப் படுக்கையறைக்கு வெளியே அல்லது காலடியில் சற்றுத் தொலைவில் போனை வைப்பது கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கும்.