இன்றைய காலத்தில் பலருக்கு உடல் எடையை பராமரிப்பது சவாலானதாக இருக்கிறது. அதேபோல பலர் எடையை குறைக்க ஆர்வம் காட்டுவதைப்போல, சிலர் எடையை அதிகரிப்பதிலும் ஆர்வமாக இருக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் உலர் பழங்களை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது உடல் எடையை அதிகரிக்க உதவும் என பலர் நம்புகின்றனர். இந்தப் பதிவில் பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடை உண்மையிலேயே அதிகரிக்குமா? என்பதை பார்க்கப் போகிறோம்.
பாதாம், முந்திரி, திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் போன்ற உலர் பழங்கள் அவற்றின் அதிக ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்றவை. அவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், அதிக கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உலர் பழங்களிலும் கலோரிகள் அதிகமாக இருப்பதால், நீங்கள் தாராளமாக அவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை விட ஆரோக்கிய கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், உங்களுக்கு தேவைப்படும் அதிக கலோரிக்கு இவை பங்களிக்கும்.
என்னதான் உலர் பழங்கள் உங்களது எடை அதிகரிப்புக்கு பயனுள்ளதாக இருந்தாலும் அவற்றை சீரான உணவுடன் உட்கொள்ள வேண்டும். அதாவது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் காய்கறிகள் போன்ற பிற உணவுகளுடன் சேர்த்து ஒரு பகுதியாக இவற்றை உட்கொள்வது உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நல்லது.
உலர் பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும் அவற்றை மிதமாக உட்கொள்ள வேண்டும். இதனால் மற்ற உடல் எடை அதிகரிப்பு அல்லது ஊட்டச்சத்துக்களில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்களது குறிப்பிட்ட தேவைக்கு எவ்வளவு உலர் பழங்கள் சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கவும். இதற்கு ஒரு சுகாதார நிபுணரை அணுகி கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
மேலும் வெறும் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்காமல், அத்துடன் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே, கொழுப்பின் எடை அதிகரிப்பதற்கு பதிலாக, தசையின் எடை அதிகரிக்கும். இது உங்களுக்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
எனவே, சரியான படி உடல் எடையை அதிகரிக்க, சீரான உணவுடன் உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.