பாட்டி சொன்னதும் டாக்டர் சொல்றதும் ஒண்ணா? மழைக்கால தயிர் பஞ்சாயத்துக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்!

Curd
Curd
Published on

மழைக்காலம் வந்துவிட்டாலே போதும், சூடாக பஜ்ஜியும், தேநீரும் ஒரு பக்கம் நம்மை இழுக்க, இன்னொரு பக்கம் நம் வீட்டுப் பெரியவர்கள், "ஏய், இந்த நேரத்துல தயிர் சாப்பிடாத, சளி பிடிச்சுடும்" என்று ஒரு அதட்டல் போடுவார்கள். தயிர் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய மன உளைச்சலே தரும். 

தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? மழைக்காலத்தில் தயிர் சாப்பிட்டால் நிஜமாகவே சளி பிடிக்குமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பாட்டி வைத்தியமும் பாரம்பரிய நம்பிக்கையும்!

நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தின் படி, மழைக்காலத்தில் நம்முடைய செரிமான சக்தி சற்று குறைவாக இருக்குமாம். தயிர், இயல்பாகவே ஜீரணமாகக் கொஞ்சம் நேரம் எடுக்கும் ஒரு உணவு. அதுமட்டுமில்லாமல், அதற்கு 'கபம்' அதாவது சளியை அதிகரிக்கும் தன்மை இருப்பதாக நம்பப்படுகிறது. 

மழைக்காலத்தின் குளிர்ச்சியான சூழலில், குளிர்ச்சியான தயிரை சாப்பிடும்போது, அது உடலில் கபத்தை அதிகரித்து, சளி, இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதுதான் நம் முன்னோர்களின் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக, இரவில் தயிர் சாப்பிடுவதை அவர்கள் முழுமையாகத் தவிர்க்கச் சொல்வதற்கும் இதுவே காரணம். இந்த நம்பிக்கைதான் இன்றுவரை நம் வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?

அறிவியல் ரீதியாக, சளி மற்றும் இருமலுக்குக் காரணம் வைரஸ் கிருமிகளே தவிர, நாம் உண்ணும் தயிர் அல்ல. உண்மையில், தயிர் ஒரு மிகச்சிறந்த புரோபயாட்டிக் (Probiotic) உணவு. அதாவது, நம் குடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்ட ஒரு சூப்பர்ஃபுட். இந்த நல்ல பாக்டீரியாக்கள், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே உதவுகின்றன. 

இதில் உள்ள கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலு சேர்க்கக்கூடியவை. ஆக, அறிவியல் பார்வையில், தயிர் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் இல்லை. மாறாக, அது நம்மை நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராட தயார்படுத்தும் ஒரு நல்ல உணவு.

இதையும் படியுங்கள்:
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல: சரியா? தவறா?
Curd

அப்படியானால், "எனக்கு ஏன் தயிர் சாப்பிட்டா தொண்டை கரகரங்குது?" என்று நீங்கள் கேட்கலாம். இங்கேதான் ஒரு சின்ன ரகசியம் இருக்கிறது. பிரச்சனை தயிரில் இல்லை, நாம் அதைச் சாப்பிடும் விதத்தில்தான் இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே, 'ஜில்' என்று தயிரை சாப்பிடும்போது, அது தொண்டையில் ஒருவிதமான எரிச்சலை அல்லது அதிர்வை ஏற்படுத்தலாம். 

ஏற்கெனவே சளி பிடிப்பதற்கான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு, இந்த குளிர்ச்சி தொண்டைப் புண்ணை அதிகப்படுத்தி, சளி தீவிரமடைந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதுதான் பலரும் தயிர்தான் சளிக்குக் காரணம் என்று தவறாக நினைக்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
இனி வடை சாப்பிட பயமேன்? - ஆவியில் வேகவைத்த வாழைப்பூ வடை!
Curd

எப்படிச் சாப்பிட வேண்டும்?

முதலில், ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த தயிரை, அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு சாப்பிடுங்கள். அதிகம் புளிக்காத தயிராக இருப்பது நல்லது. நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தப்படும் புளித்த தயிர் சிலருக்கு அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

முடிந்தவரை மதிய உணவுடன் தயிரைச் சேர்த்துக்கொள்வது சிறந்தது. இரவு நேரங்களில் தவிர்ப்பது, செரிமானத்திற்கு உதவும். இன்னும் ஒருபடி மேலே போய், தயிருடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் அல்லது சீரகத் தூள் சேர்த்துக் கொண்டால், அது தயிரின் குளிர்ச்சித் தன்மையை சமன் செய்து, செரிமானத்திற்கும் உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com