நீரிழிவு நோயாளிகள் வழக்கமான உடல் செயல்பாடுகளினால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது. ஆனால் பல்வேறு விதமான உடற்பயிற்சிகளில் நீரிழிவு நோயாளிகள் எளிதாக செய்யக்கூடியது நடைப்பயிற்சி மட்டுமே. இதன் காரணமாகவே பல நீரிழிவு நோயாளிகள் வாக்கிங் செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஆனால் இப்படி நடைப்பயிற்சி செய்வது உண்மையிலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான இன்சுலின் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. நீங்கள் நடக்கும்போது உங்கள் தசைகள் ஆற்றலுக்காக குளுக்கோசை பயன்படுத்துகின்றன. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
நடைப்பயிற்சி உட்பட பல்வேறு விதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது தசைகள் குளுக்கோசை உறிஞ்சுகின்றன. இது உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் தங்களின் எடையை பராமரிக்க வேண்டியது முக்கியமானது. ஏனெனில் அதிக எடை ரத்த சர்க்கரை பராமரிப்பை சவாலாக மாற்றலாம். நடைப்பயிற்சி என்பது எடையை குறைக்கும் பயிற்சி அல்ல. அது நமது எடையை பராமரிக்க உதவும் பயிற்சியாகும்.
நீரிழிவு நோயானது இருதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே நடைப்பயிற்சி செய்வது இதய தசைகளை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைத்து, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த உடற்பயிற்சியாகும்.
நீரிழிவு நோயாளிகள் மன அழுத்தத்தை சந்தித்தால் அது அவர்களது ரத்த சர்க்கரை அளவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே நடைப்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனநலத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நடைப்பயிற்சி என்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்தை சீராக்கவும் உதவும்.
நீரிழிவு நோயாளிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இப்படி பல வகைகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு நடைப்பயிற்சியானது உதவுகிறது.
மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன் தகுந்த சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில், உங்களது தனிப்பட்ட சுகாதார நிலைமைகள் மற்றும் மருந்துகளின் அடிப்படையில் எத்தகைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பது மாறுபடலாம். எனவே நடைப்பயிற்சி செய்கிறேன் என அதிதீவிரமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்.