ஆண்களை விட பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்: ஏன் தெரியுமா?

Women Should Drink More Water Than Men: Do You Know Why?
Women Should Drink More Water Than Men: Do You Know Why?https://thamilkural.net

வெயில் சுட்டெரித்துக் கொண்டு இருக்கும் காலம் இது. ஜில்லென்று ஏதாவது பருகத் தோன்றுவது இயல்பு. அதன் மூலம் தாகத்தைத் தணிப்பதுடன் உடலையும் குளுமையாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தக் கோடை காலத்தில் பல்வேறு பானங்கள் குடிக்க இருந்தாலும் , தண்ணீர் எப்போதும் நம்முடன் வைத்திருப்பது அவசியம். காரணம், நமது உடலை எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க தண்ணீர்தான் தேவை. அது குறையும்போது உடல் சோர்வு ஏற்படும். அதனால் தண்ணீர் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

தண்ணீரை கடும் குளிர் நிலையில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மிதமான குளிர்ந்த நிலையில் மட்டுமல்லது, இயல்பான நிலையில் மட்டுமே பருக வேண்டும். அத்தியாவசியமான சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் செல்களுக்கு எடுத்துச் செல்வதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுவாசத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தருவது நாம் குடிக்கும் நீர்தான். தண்ணீரால் உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. உடலின் ஒட்டுமொத்த கழிவுகளை வெளியேற்றுவது நாம் குடிக்கும் தண்ணீர்தான். எனவே, கோடைக் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பொதுவாக, பெண்களுக்கு அதிகம் வரும் நோய்களில் ஒன்று சிறுநீரகத் தொற்று. சிலருக்கு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கூட சிறுநீரகத் தொற்றால் தொந்தரவுகள் வருவதுண்டு. இதற்குக் காரணம் வேலை பளு மற்றும் சங்கடமான சூழ்நிலை காரணமாக சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது மற்றும் சிறுநீர் கழிக்காமல் இருப்பதும்தான்தான்.

இன்று வேலைக்குச் செல்லும் பலர், குறிப்பாக பெண்கள் அதிகத் தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலும், வெளியில் உள்ள சுத்தமில்லாத கழிவறைகளைக் கருத்தில் கொண்டும், தண்ணீர் குடிப்பதையும் கழிவறை செல்வதையும் தவிர்க்கிறார்கள். இது முற்றிலும் தவறு. இதனால் சிறுநீரகத்தில் இயற்கையாகவே இருக்கும் நுண்ணுயிரிகள் அங்கேயே தங்கி நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல், அடிவயிற்று வலி, நீர்க்கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவை இந்த சிறுநீரகத்தொற்று நோயின் அறிகுறிகள். ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடும்போது பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் 40+ல் இருந்தால் இந்த 5 விஷயங்களில் கவனமாக இருங்கள்!
Women Should Drink More Water Than Men: Do You Know Why?

சிறுநீரகத் தொற்று பிரச்னையை தவிர்க்க பெண்கள் தாங்கள் குடிக்கும் நீரின் அளவை விட அதிகப்படியாக 1.5 லிட்டர் நீரை பருக வேண்டும் என்கிறார்கள். அப்படி செய்வதால் சிறுநீர் பையில் பாக்டீரியாக்களால் ஏற்படும் சிறுநீரகத் தொற்றை தடுக்கலாம் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் அமெரிக்க டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

தண்ணீர் பருகும் அளவு தேவைக்கும் குறைவாக இருக்காமல் இருக்க வேண்டும். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் என்ற அளவை சரியாகக் குடிப்பது முக்கியமானது. தண்ணீர் குறைவாக குடிப்பதால் சிறுநீர் அடர்த்தியானால் கிருமித் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சிறுநீர் எப்போதும் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது சிறந்தது. சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றும்போது கழிக்காமல் காலம் தாழ்த்துவது மிகவும் தவறு. தண்ணீரை சரியான அளவில் அருந்தும்போது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறையேனும் சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றும். எனினும் பயணங்களின்போதும் அலுவலகங்களிலும் சிறுநீர் கழிக்கும் இச்சையை கட்டுப்படுத்த நீரைக் குறைவாக அருந்துவதும் கூடவே சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றினாலும் அதை அடக்குவதும் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

குறைவாக தண்ணீர் குடிப்பது பெண்களுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக அமைவது போலவே, சிறுநீரகக் கல், பித்தப்பை கல், கணையத்தில் கல் போன்றவை உருவாவதற்கும் முக்கியக் காரணமாக இருப்பது போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். இவற்றில் கல் சேர்ந்தால் இடுப்பு மற்றும் முதுகு தண்டில் வலி, நாள்பட்ட வயிற்று வலி அறிகுறியாக தெரியும். எனவே, பெண்கள் இதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com