சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மெனோபாஸ் பிரச்னை, தைராய்டு ஹார்மோன் இம்பேலன்ஸ், அதிக எடை இந்த ஐந்தும் 40+ வயதை எட்டிய பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைகள். 40 வயதை எட்டும் பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை எடுத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.
நாற்பது வயதைத் தாண்டிய பெண்களுக்கு மெனோபாஸ் ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் இரவில் தூக்கம் சரியாக வராது, அடிக்கடி வியர்க்கும். இதற்குக் காரணம் ஹார்மோனில் மாற்றம் ஏற்படுவதுதான். மெனோபாஸ் சமயத்தில் அதிகப்படியான உடல் பருமன் ஏற்படும். இதற்கு உணவுக் கட்டுப்பாடும் தகுந்த உடற்பயிற்சியும் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வயதில் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த வயதில் எடை கூட காரணம் உணவில் நிறைய சர்க்கரை, இனிப்பு பொருட்களை சேர்த்துக்கொள்வதுதான். இதனால் விரைவாக உடல் எடை கூடும். அதிகப்படியான சர்க்கரை உடல் எடையை மட்டுமல்ல, டைப் 2 நீரிழிவு நோய்க்கும் வழி வகுக்கும். மன அழுத்தமும் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணம். இந்த வயதில் நிறைய பொறுப்புகள், வேலை சுமை மற்றும் அதிக பதற்றம் ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இதனால் உடல் எடை கூட வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது.
நாற்பது வயதில் மனம் பக்குவம் பெற்றிருந்தாலும் உடல் எல்லா வேலைகளையும் செய்ய ஒத்துழைக்காது. மூளையும் மனதும் இந்த வயதில் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு குறையும் வராது. இந்த வயதில் தனது வயதை ஒத்தவர்களுடன்தான் அதிகம் பழகுவார்கள். அதை விடுத்து, இளம் வயதினருடன் நட்புகொள்ள இளமையான சிந்தனையும், உணர்வும் ஏற்படும். இது நம் மனதை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
பெரும்பாலும் இந்த வயதில்தான் பெண்களுக்கு தைராய்டு பிரச்னை தோன்றும். ஆண்களை விட பெண்களுக்கே இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணத்தால் ஏற்படும் இப்பிரச்னையால் உடல் பருமன், முடி கொட்டுதல், உடல் சோர்வு, மலச்சிக்கல், மாதவிடாய் சிக்கல்கள் தோன்றும். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் அயோடின் நிறைந்த உப்பை சமையலில் பயன்படுத்துவதும் அவசியம்.
மேற்குறிப்பிட்ட இந்த ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தி, தகுந்த உடற்பயிற்சிகள், சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் மனநலம் பேணுவது, மருத்துவரின் ஆலோசனை பெற்று நடப்பது என இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் இன்றி நலமுடன் வாழலாம்.