கொரோனா தொற்று உலகத்தையே ஆட்டிப் படைத்த ஒரு கொடிய வைரஸ். லட்சக்கணக்கான உயிர்களை தின்ற இந்த தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஐரோப்பாவில் XEC எனப்படும் புதியவகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிபிசி அறிக்கையின் படி, இந்த XEC எனப்படும் புதியவகை கொரோனா தொற்று ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் UK, US, டென்மார்க் மற்றும் பிற நாடுகளில் கண்டறியப்பட்டது என்று தெரியவந்துள்ளது. அதன் பிறகு இது தற்போது ஐரோப்பாவில் வேகமாக பரவி வருகிறது. XEC தொற்று இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ளது. தற்போது இதன் பரவல் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆப்பிரிக்காவில் குரங்கம்மை நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலும் தற்போது ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உருவாகி இருப்பது உறுதியாகியுள்ளது. டெங்கு, நிபா வைரஸ், குரங்கம்மை போன்ற தொற்றுக்களால் ஆங்காங்கே மக்கள் பாதிக்கப்பட்டுதான் வருகின்றனர். இந்நிலையில், XEC எனப்படும் புதியவகை கொரோனா தொற்று பரவி வருகிறது என்ற செய்தி மக்கள் மத்தியில் அதிக பீதியை கிளப்பியுள்ளது.
XEC தொற்று
XEC எனப்படும் இந்த புதியவகை கொரோனா தொற்று, Omicron அல்லது Covid இன் சில முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது, சில மாற்றங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே, இன்டிபென்டன்ட் அறிக்கையின்படி, இந்த தொற்று சில மாதங்களுக்குள் வேகத்தை அதிகரிக்கும் என்று ஆகஸ்ட் மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர். அதைபோல் தற்போது இந்த தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
XEC தொற்றின் அறிகுறிகள்
காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல் வலி, சோர்வு, பசியின்மை, தசைப்பிடிப்பு போன்றவை இந்த தொற்றின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தொற்றுகளின் பரவலை தடுப்பதற்கு நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெளியில் செல்லும்போது முகமூடிகளை கட்டாயம் அணியுங்கள்.
நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால், முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
முக்கியமாக அதிக நெரிசலான பகுதிகளை தவிர்ப்பது நல்லது.
மற்றவர்களிடம் இருந்து உடல் ரீதியான தூரத்தை பேணுவது நல்லது.
அடிக்கடி கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
தொற்றுக்கான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகுங்கள்.